குடியாத்தம் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்ச ரூபாய் மோசடி சர்வதேச கும்பல் கைவரிசை


குடியாத்தம் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்ச ரூபாய் மோசடி சர்வதேச கும்பல் கைவரிசை
x
தினத்தந்தி 14 Feb 2019 2:45 AM IST (Updated: 14 Feb 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம், 

இந்தியா முழுவதும் பணப்பரிமாற்றத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு ஏ.டி.எம். மற்றும் டெபிட், கிரிடிட் கார்டுகளை பயன்படுத்த ஊக்குவித்து வருகிறது. இதனால் ஷாப்பிங் மால்கள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பெரிய வணிக நிறுவனங்களில் ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளின் வழியாக பணத்தை செலுத்துவது அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவிலான மோசடி கும்பல் வாடிக்கையாளர்களின் கார்டுகளில் உள்ள தகவல்களை திருடி அதன்மூலம் போலியாக கார்டுகளை உருவாக்கி ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்து வருகின்றனர்.

இதேபோல் சம்பவம் குடியாத்தம் பகுதியில் நடைபெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

குடியாத்தம் பகுதிகளை சேர்ந்த பள்ளி ஆசிரியை உள்பட சிலரது வங்கிக்கணக்கில் இருந்து கடந்த சில மாதங்களில் திடீரென பல ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ்நிலையம் மற்றும் வங்கியில் புகார் அளித்தனர். அதில் சுமார் ரூ.6 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், பிரபு உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த மோசடி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கு பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் குடியாத்தம் ரெயில்நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுவிட்டு ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் மூலம் பணம் செலுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கில் பணியாற்றும் நபர்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் சிலருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒருவர் பெட்ரோல் போட வந்துள்ளார். அப்போது அங்கு பணியாற்றும் பிடிபட்ட நபரிடம் பேச்சு கொடுத்துள்ளார். தொடர்ந்து சென்னையை சேர்ந்த நபர் பணியாளரிடம் விரைவில் அதிக பணம் சம்பாதிக்க தான் சிறிய அளவிலான ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் கொடுப்பதாகவும், பெட்ரோல் போட வரும் நபர்களின் கார்டுகளை பெட்ரோல் பங்க்கின் ‘ஸ்வைப்பிங்’ எந்திரத்திலும், யாருக்கும் தெரியாமல் தான் கொடுக்கும் ‘ஸ்வைப்பிங்’ எந்திரத்திலும் பயன்படுத்த கூறியுள்ளார். அந்த சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். அட்டையின் பாஸ்வேர்டை குறித்து வைத்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

அதன்படி அந்த பணியாளர் வாடிக்கையாளர் கார்டை தன்னிடம் உள்ள சிறிய மெஷினில் ஸ்வைப்பிங் செய்து, அதன் டேட்டாக்களை வாரத்திற்கு ஒருமுறை சென்னை நபருக்கு கொடுத்து வந்துள்ளார். இதற்கு பதிலாக சென்னை நபர் அவருக்கு பல ஆயிரம் பணம் கொடுத்து வந்துள்ளார்.

டேட்டாக்களை பெற்ற சென்னை நபர் அதனை கேரளாவில் உள்ள சர்வதேச மோசடி கும்பலுக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் அந்த டேட்டாக்களை பயன்படுத்தி வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வந்தது தெரிந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் சென்னை நபரையும், கேரளாவை சேர்ந்த மோசடி கும்பலையும் சுற்றி வளைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெட்ரோல் பங்க்கில் வெளியூரை சேர்ந்தவர்களும் ‘ஸ்வைப்பிங்’ மூலம் தங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு சென்றுள்ளனர். அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கும், சக பணியாளர்களுக்கும் தெரியாமல் பணியாளர் ஒருவரே இந்த மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெட்ரோல் பங்க் நடத்தும் உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story