குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் மோட்டார் சைக்கிள் ஷோரூம் கிடங்கில் ஊற்றெடுக்கும் தண்ணீர் கண்டுகொள்ளாத அதிகாரிகள்


குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் மோட்டார் சைக்கிள் ஷோரூம் கிடங்கில் ஊற்றெடுக்கும் தண்ணீர் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
x
தினத்தந்தி 14 Feb 2019 4:00 AM IST (Updated: 14 Feb 2019 3:02 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மோட்டார் சைக்கிள் ஷோரூம் கிடங்கில் தண்ணீர் ஊற்றெடுக்கிறது.

ஈரோடு,

ஈரோடு பெருந்துறை ரோடு பழைய பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஒன்று உள்ளது. தரைமட்ட தளத்துடன் கூடிய இந்த ஷோரூமின் மேல் பகுதி மோட்டார் சைக்கிள் ஷோரூமாகவும், தரைமட்டப்பகுதி கிடங்காகவும் செயல்பட்டு வந்தது. புதிய மோட்டார் சைக்கிள்களை கொண்டு நிறுத்தி வைக்கும் இடமாகவும், உதிரிபாகங்கள் பொருத்தும் இடமாகவும் அது செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஷோரூமின் முன்பகுதியில் ரோட்டோரத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக குழாய் உடைப்பு அதிகரித்து அந்த பகுதியில் தண்ணீர் ஆறுபோல பாய்ந்து வந்தது. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. நீரேற்றம் செய்யும் போதெல்லாம் அந்த பகுதியில் தண்ணீர் அதிக அளவில் வெளியேறி வீணாகிக்கொண்டு இருந்தது.

இந்த நிலையில் அருகில் உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூம் தரைமட்ட தளத்தில் உள்ள குடோனில் தண்ணீர் ஊற்றெடுக்க தொடங்கியது. அது குளம்போல தேங்கியது. இதனால் வாகனங்கள் நிறுத்த முடியாமல் சிரமப்பட்ட கடை நிர்வாகிகள் மின்மோட்டார் பம்பு வைத்து தண்ணீரை வெளியேற்றினார்கள். ஆனால், சாலையோர குழாயில் தண்ணீர் வெளியேறும் நேரம் எல்லாம் கிடங்கிலும் தண்ணீர் ஊற்றெடுத்து குளம்போல பெருகி வந்தது. எனவே வாகனங்களை வேறு இடத்துக்கு மாற்றி உள்ளனர். நேற்று இந்த கிடங்கில் கால் முட்டளவு தண்ணீர் தேங்கி இருந்தது.

இதுபற்றி ஷோரூம் மேலாளர் பிரதீப் என்பவர் கூறியதாவது:–

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது முதல் எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்று தெரியாமலேயே தண்ணீர் ஊற்றாக வருகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய கோரி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு தண்ணீர் ஊற்றெடுப்பதால் கட்டிடம் வலு இல்லாமல் மாறி விடும். அதுமட்டுமின்றி தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிதண்ணீர் வீணாக சென்று சாக்கடையிலும் கலக்கிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story