தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு: காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சட்டசபைக்கு திடீர் வருகை
தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு வழங்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் நேற்று திடீரென சட்டசபைக்கு வந்தனர்.
பெங்களூரு,
தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு வழங்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் நேற்று திடீரென சட்டசபைக்கு வந்தனர்.
மந்திரிசபை விரிவாக்கம்
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) அரசு நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் மந்திரிகள் ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் சங்கர் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
மந்திரி பதவியை பறித்ததால் ரமேஷ் ஜார்கிகோளி கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, நாகேந்திரா, மகேஷ் கமடள்ளி, உமேஷ் ஜாதவ் ஆகியோர் மும்பைக்கு சென்றனர். அவர்கள் பா.ஜனதாவினரின் ஆபரேஷன் தாமரையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாயின.
கூட்டணி ஆட்சிக்கு சிக்கல்
அவர்களுடன் காங்கிரசை சேர்ந்த சுமார் 10 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டது. இது கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது.
இதில் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆயினும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்தனர்.
கொறடா உத்தரவு
இதனால் அவர்களுக்கு காங்கிரஸ் நோட்டீசு அனுப்பியது. அதற்கு அவர்கள் பதிலளித்தனர். ஆனால் அவர்களது பதில் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறிய காங்கிரஸ், நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் நோட்டீசு அனுப்பியது. அவர்கள் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சட்டசபை காங்கிரஸ் கட்சி குழு கூட்டம் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. அதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
காங்கிரஸ் மனு
இதையடுத்து கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவா்கள் 4 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் காங்கிரஸ் மனு வழங்கியது. இந்த நிலையில் 13-ந் தேதி (அதாவது நேற்று) மற்றும் 14-ந் தேதி கட்டாயம் சபையில் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜாா்கிகோளி, நாகேந்திரா, மகேஷ் கமடள்ளி, உமேஷ் ஜாதவ் ஆகிய 4 பேரும் கர்நாடக சட்டசபை கூட்டத்திற்கு நேற்று திடீரென வந்தனர். அவர்கள் 4 பேரும் தங்களுக்கான இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
சட்ட நிபுணர்களின் ஆலோசனை
அவர்களிடம் காங்கிரசின் பிற எம்.எல்.ஏ.க்கள் வந்து பேசினர். ஆனால் அவர்களை சித்தராமையா கண்டுகொள்ளாமல் இருந்தார். சட்டசபை கூட்டத்தில், அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் கலந்துகொண்டதால் கூட்டணி அரசுக்கு இருந்த சிக்கல் தற்காலிமாக நீங்கியுள்ளது.
ஆயினும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது குறித்து சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்து வரும் நாட்களில் தான் அவர்களின் செயல்பாடு என்ன என்பது தெரியவரும்.
Related Tags :
Next Story