100 நாள் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் திடீர் சாலைமறியல்


100 நாள் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் திடீர் சாலைமறியல்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:30 PM GMT (Updated: 13 Feb 2019 9:57 PM GMT)

வில்லியனூர் அருகே 100 நாள் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே கோர்க்காடு கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியை சேர்ந்தவர்களுக்கு 15 நாட்கள் வேலை வழங்கப்பட்ட நிலையில், மற்றொரு பகுதியை சேர்ந்தவர்களுக்கு கடந்த 3 நாட்கள் வேலை அளிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் வேலையில் ஈடுபட்டவர்களிடம் மதுபோதையில் வந்த சிலர் தகராறு செய்தனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உடனே வேலையை நிறுத்திவிட்டனர். இதனால் வேலையின்றி பாதிக்கப்பட்ட 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை கோர்க்காடு மெயின்ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த மங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்துசெல்ல மறுத்துவிட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, 100 நாள் திட்டத்தில் முழுமையாக வேலை வழங்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து வேலை வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story