பெண் கற்பழிப்பு பற்றி பேச்சு: சட்டசபையில் சபாநாயகர் ரமேஷ்குமார் வருத்தம் தெரிவித்தார் அவை குறிப்பில் இருந்து நீக்கவும் உத்தரவு


பெண் கற்பழிப்பு பற்றி பேச்சு: சட்டசபையில் சபாநாயகர் ரமேஷ்குமார் வருத்தம் தெரிவித்தார் அவை குறிப்பில் இருந்து நீக்கவும் உத்தரவு
x
தினத்தந்தி 14 Feb 2019 4:00 AM IST (Updated: 14 Feb 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

பெண் கற்பழிப்பு பற்றிய பேச்சுக்காக சட்டசபையில் சபாநாயகர் ரமேஷ்குமார் வருத்தம் தெரிவித்தார். அத்துடன் அந்த பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு, 

பெண் கற்பழிப்பு பற்றிய பேச்சுக்காக சட்டசபையில் சபாநாயகர் ரமேஷ்குமார் வருத்தம் தெரிவித்தார். அத்துடன் அந்த பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

நம்பிக்கை உள்ளது

கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம், ஆடியோ உரையாடல் குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய உறுப்பினர்கள் அனைவரும், சபாநாயகர் மீது நம்பிக்கை உள்ளது, ஒட்டுெமாத்த சபையே உங்கள் மீதான புகாரை நிராகரிக்கிறது என்று புகழ்ந்து பேசினர்.

அந்த வரிசையில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேசும்போதும், சபாநாயகர் பற்றி புகழ்ந்து பேசினார். உங்கள் மீது நம்பிக்கை உள்ளது, இந்த சபையே புகாரை நிராகரித்துவிட்டபோது விசாரணை தேவையா? என்று பேசினார்.

எத்தனை முறை கற்பழித்தனர்

அப்போது சபாநாயகர் ரமேஷ்குமார் குறுக்கிட்டு, “ஒரு பெண் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணைக்காக அந்த பெண் கோர்ட்டுக்கு அழைக்கப்பட்டார். அவரிடம், யார் கற்பழித்தது, எங்கு கற்பழித்தனர், எத்தனை முறை கற்பழித்தனர் என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.

விசாரணை முடிந்து அந்த பெண் கோர்ட்டை விட்டு வெளியே வந்தார். அவரிடம் விசாரணை எப்படி இருந்தது என்று கேட்டனர். அதற்கு பாதிக்கப்பட்ட அந்த பெண், உண்மையில் என்னை ஒரு முறை தான் கற்பழித்தனர். கோர்ட்டில் அது தொடர்பாக கேள்விகளை கேட்டு என்னை 100 முறை கற்பழித்துவிட்டனர் என்று கூறினார்” என ெதரிவித்தார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

இதை கூறிவிட்டு சபாநாயகர் சிரித்துவிட்டார். சபையில் இருந்த உறுப்பினர்களும் சிரிப்பலையில் மூழ்கினர். இதற்கிடையே பெண் கற்பழிப்பு குறித்து சபாநாயகரின் இந்த கருத்துக்கு பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பேச்சுக்காக சபாநாயகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில் நேற்று உணவு இடைவேளைக்கு பிறகு சட்டசபை கூடியபோது சபாநாயகர் ரமேஷ்குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், “அனிதா குமாரசாமி, சவுமியா ரெட்டி உள்ளிட்ட பெண் உறுப்பினர்கள் என்னிடம் வந்து ஒரு மனு கொடுத்தனர். பெண் கற்பழிப்பு குறித்து பேசியபோது, சிரித்ததால் தங்களை வருத்தம் அடைய செய்தது என்று தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

வருத்தம் தெரிவிக்கிறேன்

பெண்களை அவமதிக்கும் நோக்கத்தில் நான் அவ்வாறு பேசவில்லை. அதுகுறித்து பேசியபோது சிரித்ததால் தவறாகிவிட்டது. பெண்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் பெண் கற்பழிப்பு குறித்து நான் பேசிய பேச்சுகளை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன். நான் பெண்களை எப்போதும் மதிப்பவன். நான் கற்பழிப்பு குறித்து பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்றார்.

Next Story