சின்னசோரகை கிராமத்தில் மனுநீதி திட்ட முகாம்: 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரோகிணி வழங்கினார்
சின்னசோரகை கிராமத்தில் நடந்த மனுநீதி திட்ட முகாமில் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
மேச்சேரி,
நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னசோரகை கிராமத்தில் நேற்று மனுநீதி திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
இந்த முகாமில் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:-
விவசாயம் என்பது கலாசார விஷயமாக மட்டும் இல்லாமல் ஒரு லாபம் பெறக்கூடிய தொழிலாக மாற்றுவதற்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றில் கூட்டு பண்ணைய திட்டம் சிறு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது. ஒரு பகுதியில் உள்ள சிறு விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டுப்பண்ணையம் அமைத்தால் அரசின் மூலம் கூட்டு பண்ணைய திட்டத்தில் எந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும்.
வரக்கூடிய கோடை காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர், அடிப்படை வசதிகள் எளிதான மூறையில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மேச்சேரி-நங்கவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிய முதல்-அமைச்சருக்கு பொதுமக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முடிவில், வருவாய்த்துறை, சமூக நலத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, தோட்டக்கலைத்துறை உள்பட பல்வேறு துறைகள் மூலம் 60 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க், மேட்டூர் உதவி கலெக்டர் லலிதா, முன்னாள் பேரூராட்சி தலைவர் எமரால்டு வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story