மாவட்ட செய்திகள்

தனுஷ்கோடி கடற்கரையில் 927 ஆமை முட்டைகள் சேகரிப்பு + "||" + 927 turtle eggs collection at Dhanushkodi beach

தனுஷ்கோடி கடற்கரையில் 927 ஆமை முட்டைகள் சேகரிப்பு

தனுஷ்கோடி கடற்கரையில் 927 ஆமை முட்டைகள் சேகரிப்பு
தனுஷ்கோடி கடற்கரையில் 927 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் ஆமை, கடல் பசு, பவளப்பாறைகள் உள்ளிட்ட பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகஅளவில் உள்ளன. கடல் ஆமைகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனுஷ்கோடி பகுதியில் ஆமை முட்டைகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான கடற்கரை பகுதியில் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினரும் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தனுஷ்கோடி கம்பிப்பாடு பகுதியில் இருந்து அரிச்சல்முனை வரையிலான கடற்கரை பகுதியில் 8 இடங்களில் ஆமைகள் முட்டையிட்டு சென்றிருப்பதை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து அந்த இடங்களில் இருந்து 927 முட்டைகளை வனத்துறையினர் பாதுகாப்பாக சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகள் எம்.ஆர்.சத்திரம் அருகே கடற்கரை பகுதியில் உள்ள குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டது.

இதுபற்றி வனச்சரக சதீஷ் கூறியதாவது:– தனுஷ்கோடி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையிலும் 4,200 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட முட்டைகள் அனைத்தும் குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. குஞ்சுகள் பொரிப்பதற்கு சராசரியாக முட்டையிட்ட நாளில் இருந்து 55 முதல் 75 நாட்கள் வரை ஆகலாம். குறிப்பாக ஆமைகள் இரவு நேரம் மற்றும் அதிகாலை நேரங்களில் தான் கடற்கரை பகுதியை நோக்கி முட்டையிட வரும்.

அதனால் அந்த நேரங்களில் ஆமைகள் முட்டையிட வந்தால் தயவுசெய்து மீனவர்கள் யாரும் அந்த ஆமையை தொந்தரவு செய்ய வேண்டாம். மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டும்தான் கடல் ஆமையை அழிவில் இருந்து முழுமையாக பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடற்கரை அருகே 40 கிலோ எடை கொண்ட ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. கடல் அலை மற்றும் காற்றின் வேகத்தால் இறந்த அந்த ஆமை மீண்டும் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டது.