காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் விளக்கம் ஆளுக்கு ஒரு காரணம் கூறினர்


காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் விளக்கம் ஆளுக்கு ஒரு காரணம் கூறினர்
x
தினத்தந்தி 14 Feb 2019 4:00 AM IST (Updated: 14 Feb 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் நேற்று விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் 4 பேரும் ஆளுக்கு ஒரு காரணத்தை தெரிவித்தனர்.

பெங்களூரு, 

காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் நேற்று விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் 4 பேரும் ஆளுக்கு ஒரு காரணத்தை தெரிவித்தனர்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தையும், சட்டசபை கூட்டத்தையும் காங்கிரசை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, நாகேந்திரா, மகேஷ் கமடள்ளி, உமேஷ் ஜாதவ் ஆகியோர் புறக்கணித்து இருந்தனர். நேற்று 4 பேரும் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து ஆளுக்கு ஒரு கருத்தை தெரிவித்தனர். அப்போது நாகேந்திரா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சித்தராமையாவை சந்தித்து பேசுவோம்

பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ. உள்பட பலருக்கு அதிருப்தி இருந்தாலும், அவர்கள் காங்கிரஸ் கட்சியிலேயே நீடிக்கிறார்கள். கட்சியை விட்டு விலகுகிறோம் என்று நாங்கள் எங்கும் சொல்லவில்ைல. கட்சிக்கு எதிராக நடந்து கொள்ளவில்லை. மும்பையில் எனக்கு நண்பர்கள் உள்ளனர்.

அங்கு பலமுறை நான் சென்றுள்ளேன். அதே போல் தான் நான் மும்பைக்கு சென்றிருந்தேன். எங்கள் தலைவர் சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசுவோம். பல முறை கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதை நாங்கள் கடைப்பிடித்து உள்ளோம்.

சொந்த வேலைகள் காரணமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. அதற்கு வேறு காரணத்தை கற்ப்பிப்பது சரியல்ல.

இவ்வாறு நாகேந்திரா கூறினார்.

உடல் நிலை சரியில்லை

அதுபோல் மகேஷ் கமடள்ளி எம்.எல்.ஏ. கூறியதாவது:-

எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் தான் சட்டசபை கூட்டத்திற்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கும் வர முடியவில்லை. நான் பா.ஜனதா தலைவர்களின் தொடர்பில் இருக்கவில்லை.

எனது தலைவர் ரமேஷ் ஜார்கிகோளிக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான். அது சிறிய அளவில் இருக்கும்போது முடிந்திருக்க வேண்டும். ஆனால் அது பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. நான் காங்கிரசிலேயே இருப்பேன். சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவரை நேரில் சந்தித்து பேசுவேன்.

இவ்வாறு மகேஷ் கமடள்ளி கூறினார்.

மேலும் உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏ. கூறுகையில், “சித்தராமையா எங்கள் தலைவர். நான் எந்த தவறும் செய்யவில்லை. மும்பைக்கும் செல்லவில்லை. பா.ஜனதாவிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். அவர்களிடம் பேசாமல் இருக்க முடியாது. அவர்களிடம் பேசுவதால், நான் காங்கிரசை விட்டு சென்றுவிடுவேன் என்று கூறுவது சரியல்ல. காங்கிரசிலேயே நீடிப்பேன். தனிப்பட்ட காரணங்களால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை” என்றார்.

ராஜினாமா செய்ய தயார்

இதுகுறித்து ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. கூறும்போது, “தகுதி நீக்கம் செய்வதாக இருந்தால் செய்யட்டும். நான் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். அதை பற்றி கவலை இல்லை. சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறேன்” என்றார்.

4 எம்.எல்.ஏ.க்களும் ஆளுக்கு ஒரு காரணத்தை தெரிவித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சங்கர், நாகேஷ் ஆகிய 2 பேரும் நேற்று சட்ட சபைக்கு வந்திருந்தனர்.

Next Story