மாவட்ட செய்திகள்

புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்ல மீண்டும் தடை + "||" + For Kerala through Puliyarai checkpoint High burden Loader to go Banned again

புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்ல மீண்டும் தடை

புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்ல மீண்டும் தடை
புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்ல போலீசார் மீண்டும் தடை விதித்துள்ளனர்.
செங்கோட்டை,

தமிழகம்-கேரள எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை வழியாக கேரளாவுக்கு தினமும் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்று வருகின்றன. கோட்டைவாசலை கடந்து ஆரியங்காவு வனத்துறை சோதனை சாவடி முதல் தென்மலை வரை மலைப்பாதையாகும். மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான வளைவுகள் கொண்ட இந்த பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றிச் சென்று வருவதால் அந்த வழியில் அடிக்கடி சாலைகள் பழுதடைந்தன. இதையடுத்து அந்த சாலைகளை கேரள மாநில நெடுஞ்சாலைத்துறையினர் சரிசெய்வது வழக்கமாக நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவ மழையால் தென்மலை கல்லடா ஆற்றில் 13 கண் பாலம் அருகே சாலையில் சரிவு உருவாகி, அருகில் உள்ள கல்லடா ஆற்றில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த சாலையை சரிசெய்யும் வரை அந்த வழியாக 10 டன்னுக்கு அதிகமான அளவு பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் செல்வதற்கு கொல்லம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதன் பின்னர் சபரிமலை சீசன் காரணமாக சில மாதங்கள் 20 டன் வரை பாரம் ஏற்றி செல்வதற்கு அனுமதி அளித்தது.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் இந்த சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதனை தொடர்ந்து லாரிகளில் 10 டன் அளவுக்கு மேல் பாரம் ஏற்றிச் செல்ல தடை விதித்து இரு மாநில எல்லையோர மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதன் பேரில், புளியரை சோதனை சாவடி வழியாக செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அந்த லாரிகள் நாகர்கோவில் வழியாக நீண்ட தூரம் சுற்றி கேரளாவுக்கு செல்கின்றன.