திருப்பூர் மார்க்கெட்டில் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் விற்பனை அமோகம்
காதலர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் பூ மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் விற்பனை அமோகமாக இருந்தது. ஒரு பூ ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்,
காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காதல் என்பது தேன் கூடு. அதை கட்டுவது என்பது பெரும்பாடு என்று சொல்வார்கள். காதல் என்பது அனைவருக்கும் வந்து விடாது. நினைத்தவுடன் யாரையும் காதலித்து விடவும் முடியாது. காதலன், காதலி இருவர் மனமும் ஒன்றாக இணைய பல நாட்கள், ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம்.
அத்தனை சிறப்புமிக்க காதலை கொண்டாடும் வகையில் பிப்ரவரி மாதம் 14-ந்தேதியை காதலர் தினமாக காதலர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். அன்றை தினம் காதலர்கள் தங்கள் காதலிகளுக்கு ரோஜா பூக்களையே காதல் பரிசாக வாங்கிக் கொடுக்கிறார்கள். எனவே ரோஜா பூக்களுக்கு அன்றைய தினம் கடும் கிராக்கியாக இருக்கும். விலையும் வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்திருக்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டு காதலர் தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு திருப்பூர் பூ மார்க்கெட்டில் ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து அதிக அளவில் ரோஜா பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விஜயமங்கலம், ஊத்துக்குளி, மங்கலம், தாராபுரம், பல்லடம், பொங்கலூர், அவினாசி ஆகிய இடங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து அதிக அளவில் ரோஜா பூக்களை வாங்கிச் சென்றனர். இதை தவிர இளைஞர்களும், இளம் பெண்களும் ரோஜா பூக்களை வாங்கிச்சென்றனர். இதனால் பூ மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் விற்பனை அமோகமாக இருந்தது.
இது குறித்து ரோஜா பூ மொத்த வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-
காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூர், பெங்களூருவில் இருந்து ரோஜா பூக்களை வாங்கி உள்ளோம். ஒரு கட்டுக்கு 20 பூக்கள் வீதம் 1,000 கட்டுகள் வாங்கி உள்ளோம். வழக்கமாக 100 கட்டுகள் வாங்குவோம். அவற்றை விற்று முடிக்க ஒரு வாரம் ஆகும். ஒரு கட்டு ரூ.50-க்கு வாங்கி ரூ.80-க்கு விற்போம்.
ஆனால் நேற்று விற்பனைக்கு வாங்கியுள்ள ரோஜா பூ கட்டு ஒன்று ரூ.250 அடக்க விலையாகிறது. எனவே ஒரு கட்டு ரூ.280-க்கு விற்பனை செய்கிறோம். இதனால் ஒரு பூவின் விலை ரூ.14 ஆகிறது. வெளியூர் வியாபாரிகள் வந்து கட்டாக வாங்கி சென்று விட்டனர். சில்லரை விற்பனை குறைவாகவே இருந்தது. ஒரு பூ ரூ.14-க்கே விற்றோம். நாளை (இன்று) விற்பனை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அப்போது ஒரு பூ விலை ரூ.20 வரை உயரலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story