உயர் மின்கோபுரத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் வைகோ பேட்டி


உயர் மின்கோபுரத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 14 Feb 2019 3:45 AM IST (Updated: 14 Feb 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

உயர் மின்கோபுரத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று வைகோ கூறினார்.

காங்கேயம், 

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காங்கேயம் தாலுகா முழுவதும் உள்ள கிராமங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கேயம் அருகே உள்ள ராமபட்டினம் மற்றும் நிழலிகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நிழலிகவுண்டன்பாளையம், காடையூர், சாடையாபாளையம், ராமபட்டினம், இல்லியம்புதூர், சிவன்மலை, பெருமாள்மலை, படியூர், கீரனூர் ஆகிய பகுதிகளில் புதிய மின்பாதை உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டால் விவசாயம் முற்றிலும் பாதிக்கும். தென்னை மரங்கள் அனைத்தையும் விவசாயிகள் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் காங்கேயம் அருகே ராமபட்டினத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின்கோபுரத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களையும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் நீலிக்கவுண்டம்பாளையம் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைப்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

உயர் மின்கோபுரத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். உண்ணாவிரதம் இருக்க நினைக்கும் விவசாயிகளை காவல்துறையினர் மிரட்டுகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட இப்படிப்பட்ட மிரட்டல்கள் இருந்ததில்லை. அவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறவழி போராட்டங்களுக்கு அனுமதி அளித்தனர். சிறு விவசாயிகள் போராடாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது ஒரு காட்டாட்சியாக, சர்வாதிகார ஆட்சியாக ஜனநாயகத்திற்கு விரோதமான அரசாக உள்ளது.

இலங்கைக்கு கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ள மத்திய அரசு, 3,500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆப்பிரிக்க நாட்டுக்கு, கடலுக்கு அடியில் கேபிள் அமைத்து 1,100 கிலோ வாட் மின்சாரம் கொண்டு செல்வதாக அறிவித்துள்ளனர். ஏன் நம் நாட்டில் மின்சாரத்தை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல கூடாது? நகரங்களில் கேபிள் மூலம் கொண்டு செல்லும் அரசு, கிராமப்பகுதிகளில் ஏன் மறுக்கிறது.

உயர் மின்கோபுரம் என்றால் தான் அதில் பணம் சம்பாதிக்க முடியும். கேபிள் மூலம் என்றால் அதில் பணம் சம்பாதிக்க முடியாது. அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த விவசாயிகளும் உயர் மின்கோபுரம் விஷயத்தில் மற்ற விவசாயிகளோடு சேர்ந்து போராட முன்வர வேண்டும். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் விவசாயிகளின் எழுச்சி மிகுந்த போராட்டத்தை ராணுவத்தால் கூட கட்டுப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறி னார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கொங்கு ராஜாமணி, செயலாளர் முத்துவிஸ்வநாதன், தற்சார்பு விவசாய சங்கத்தின் பொன்னையன், ம.தி.மு.க. நகர செயலாளர் ஏ.சி.வெங்கடேஷ், ஏர்முனை இளைஞர் அணி சுரேஷ், கட்சி சார்பற்ற விவசாய சங்கம், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் என்று 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story