தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு: மக்கள் அச்சப்பட தேவை இல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது தொடர்பாக மக்கள் அச்சப்பட தேவை இல்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது தொடர்பாக மக்கள் அச்சப்பட தேவை இல்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த சம்பவத்துக்கு பிறகு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் அலுவலகம் மற்றும் முக்கிய சந்திப்புகள், சிப்காட் ஆகிய இடங்களில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது ஆயிரக்கணக்கான போலீசார், ஏதேனும் பயிற்சிக்காக வந்து இருக்கலாம். ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக அவர்கள் வரவில்லை.
ஸ்டெர்லைட் வழக்கை பொருத்தவரை எழுத்து மூலமான வாதம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனை பரிசீலித்து அடுத்த வாரத்தில் கோர்ட்டில் தீர்ப்பு வரலாம். அதற்காக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை. இதற்காக மக்கள் அச்சப்பட தேவை இல்லை. இது வழக்கமான நடவடிக்கைதான். மக்கள் பாதுகாப்புக்காகத்தான் போலீசார் உள்ளனர். எந்தவிதமான சட்ட-ஒழுங்கு பிரச்சினையும் நம் மாவட்டத்தில் இல்லை.
பிளாஸ்டிக் தடையை பொறுத்தவரை கடைகள் தோறும் சோதனை செய்து வருகிறோம். விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். இதனையும் மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story