கோவில் கொடை விழாவில் இருதரப்பினர் மோதல்: கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை கைதானவர்களை விடுதலை செய்ய கோரிக்கை


கோவில் கொடை விழாவில் இருதரப்பினர் மோதல்: கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை கைதானவர்களை விடுதலை செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 13 Feb 2019 9:45 PM GMT (Updated: 13 Feb 2019 10:10 PM GMT)

நெல்லை அருகே கோவில் கொடை விழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் கைது செய்தவர்களை விடுதலை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

நெல்லை, 

நெல்லையை அடுத்து முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவையில் நேற்று முன்தினம் கோவில் கொடை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சமுதாய ரீதியான சட்டை, பனியன் அணிவது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினர் உருட்டு கட்டையுடன் மோதலில் ஈடுபட முயன்றனர்.

உடனடியாக அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளு, முள்ளுவில் 2 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.

இந்த மோதலில் மகராஜன், அருண்பாண்டியன் ஆகியோரும், மற்றொரு தரப்பை சார்ந்த கருத்தபாண்டி, மந்திரிகுமார், ஆறுமுககுமார் ஆகியோரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் சிலர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருவையை சேர்ந்த அருண்குமார் (வயது 35) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இசக்கி, பரமசிவன் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மற்றொரு தரப்பை சேர்ந்த ஆறுமுககுமார் (35) என்பவர் கொடுத்த புகாரின் பேரில், முருகன், முத்துகுமார் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தருவை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று அதிகாலை இரு தரப்பையும் சேர்ந்த 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு வந்து, முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து முற்றுகை போராட்டம் நடத்திய கிராம மக்கள் அங்கிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக திரண்டு வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் திடீரென்று சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு கிராம மக்கள் மனு கொடுக்க சம்மதம் தெரிவித்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு வெளியே வந்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், “தருவையில் கோவில் கொடை விழா நடந்த போது ஏற்பட்ட மோதலில் போலீசார் ஒரு தரப்பை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். எங்கள் தரப்பினர் மீது வேண்டும் என்ற பொய் வழக்குப்பதிவு செய்கிறார்கள். கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும். எங்கள் தரப்பினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

கிராம மக்கள் திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story