சிக்கமகளூரு அருகே உண்டு உறைவிட பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 17 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதி


சிக்கமகளூரு அருகே உண்டு உறைவிட பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 17 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 14 Feb 2019 4:00 AM IST (Updated: 14 Feb 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு அருகே உண்டு உறைவிடப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 17 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிக்கமகளூரு, 

சிக்கமகளூரு அருகே உண்டு உறைவிடப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 17 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வாந்தி-மயக்கம்

சிக்கமகளூரு தாலுகா சிருவாசே கிராமத்தில் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிடப் பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மதியம் மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. மொத்தம் 17 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

உடனே அவர்கள் அனைவரும் அதே கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதைதொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் 17 பேரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மல்லந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், உணவே விஷமாக மாறியதால், அதனை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

தாசில்தார்விசாரணை

மேலும் சம்பவம் பற்றி கேள்விபட்டதும் தாசில்தார் சிவசாமி, சுகாதாரத் துறை அதிகாரி மஞ்சுநாத் ஆகியோர் சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். அத்துடன் சம்பவம் பற்றி தாசில்தார் விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்து சில மாணவிகளின் பெற்றோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக மல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story