சேலம் மண்டலத்தில் சட்ட விரோதமாக டாஸ்மாக் பார்கள் செயல்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு
சேலம் மண்டலத்தில் சட்ட விரோதமாக டாஸ்மாக் பார்கள் செயல்படுகிறதா? என்று அதிகாரிகள் கணக்கெடுத்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
சேலம்,
இது தொடர்பாக சேலம் மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் இளங்கோவன் கூறியதாவது:-
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,070 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் 165 இடங்களில் மட்டுமே பார்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் ஐகோர்ட்டு உத்தரவுப்படி சட்ட விரோதமாகவும், அரசின் அனுமதியின்றியும் டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மாவட்ட மேலாளர்கள் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன்விவரம் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். அதன்பிறகு சட்ட விரோதமாக செயல்படும் டாஸ்மாக் பார்கள் மூடப்படும். அதன்பிறகு அந்த பார்கள் திறக்கப்படுகிறதா? என்று போலீசார் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பார்கள் விவரத்தை அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது ஒருசில இடங்களில் அரசியல் கட்சியினரின் உதவியுடன் சட்ட விரோதமாக டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. அதன்பேரில் அந்த பார்கள் பற்றிய விவரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் சட்ட விரோதமாக டாஸ்மாக் பார்களை நடத்தி வந்தவர்கள் தற்போது கலக்கம் அடைந்துள்ளனர். அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தும் நோக்கில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்களை யாரேனும் நடத்தி வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story