தேவேகவுடா பற்றி அவதூறு பேச்சு: ஹாசன் பா.ஜனதா எம்.எல்.ஏ. வீடு மீது கல்வீச்சு; தொண்டர் படுகாயம்


தேவேகவுடா பற்றி அவதூறு பேச்சு: ஹாசன் பா.ஜனதா எம்.எல்.ஏ. வீடு மீது கல்வீச்சு; தொண்டர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:30 PM GMT (Updated: 13 Feb 2019 10:16 PM GMT)

தேவேகவுடா பற்றி அவதூறாக பேசியதாக ஹாசன் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரீத்தம் கவுடா வீடு முன்பு ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ஹாசன், 

தேவேகவுடா பற்றி அவதூறாக பேசியதாக ஹாசன் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரீத்தம் கவுடா வீடு முன்பு ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது எம்.எல்.ஏ.வின் வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பா.ஜனதா தொண்டர் படுகாயமடைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேரம் பேசும் ஆடியோ

கர்நாடகத்தில் முதல்- மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதாவினர் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த நாகனகவுடா எம்.எல்.ஏ. மகன் ஷரண்கவுடாவிடம், எடியூரப்பா பேரம் பேசுவது போன்ற ஆடியோவை முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டார்.

அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல என்றும், ஆடியோவில் இருப்பது எனது குரல் தான் என்று நிருபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என்றும் எடியூரப்பா கூறியிருந்தார்.

தேவேகவுடா பற்றி அவதூறு

இந்த நிலையில் ஆடியோவில் இருப்பது எனது குரல் தான் என்று எடியூரப்பா ஒப்புக் கொண்டார். இதற்கிடையே இந்த ஆடியோ விவகாரத்தில் சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமாரின் பெயரும் அடிப்பட்டது.

இதையடுத்து குதிரைபேர ஆடியோ விவகாரம் தொடர்பாக எஸ்.ஐ.டி. விசாரிக்கும் என்று சபாநாயகர் கூறினார். இதற்கு பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆடியோ விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பது தொடர்பாக நேற்று சபாநாயகர் அறையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 2-வதாக ஒரு ஆடியோ வெளியிடப்பட்டது. அதில் ஹாசன் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரீத்தம் கவுடா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் பற்றி அவதூறாக பேசுவது போன்று இடம் பெற்று இருந்ததாக தெரிகிறது.

எம்.எல்.ஏ. வீடு மீது கல்வீச்சு

இதுபற்றி அறிந்த ஹாசன் மாவட்ட ஜனதாதளம்(எஸ்) கட்சியினர், ஹாசன் டவுன் வித்யாநகரில் உள்ள பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ. வீட்டின் முன்பு குவிந்து போராட்டம் நடத்தினர்.

மேலும் ஜனதாதளம்(எஸ்) கட்சி தொண்டர்கள், பிரீத்தம் கவுடாவின் வீட்டிற்குள் புகுந்து அவரது பெற்றோரை தாக்க முயன்றனர். அப்போது அங்கு இருந்த பிரீத்தம் கவுடாவின் ஆதரவாளர் ராகுல் என்பவர், ஜனதாதளம்(எஸ்) கட்சியினரை தடுக்க முயன்றார். அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள் ராகுலை சரமாரியாக தாக்கினர். மேலும் பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ. வீடு மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர். அதில் ஒரு கல், ராகுலின் தலையை பதம் பார்த்தது. இதனால் அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தது.

போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்த ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கவுடா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ. வீட்டிற்குள் இருந்த ஜனதாதளம்(எஸ்) தொண்டர்களை வெளியேற்றினர். மேலும் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீஸ் சூப்பிரண்டு கேட்டு கொண்டார். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து போலீஸ் சூப்பிரண்டு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து படுகாயமடைந்த ராகுலை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஹாசன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு

இந்த சம்பவம் ஹாசன் டவுனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க ஹாசன் டவுனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story