சேலம் மாநகரில் புதிய குடிநீர் இணைப்பு வழங்க சிறப்பு முகாம் ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்
சேலம் மாநகரில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.
சேலம்,
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் நடந்தது. இதற்கு ஆணையாளர் சதீஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் புதிய குடிநீர் இணைப்பு கேட்டு மண்டலத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் பலர் ஆணையாளரிடம் விண்ணப்பங்கள் வழங்கினர்.
அதே போன்று குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைப்பு பெறுதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களையும் பொதுமக்கள் வழங்கினர். இந்த முகாம் குறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறியதாவது:-
இந்த சிறப்பு முகாமில் 106 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. விண்ணப்பித்தவர்களிடம் இருந்து குடிநீர் இணைப்பிற்கான வைப்புத்தொகை மற்றும் பாதாள சாக்கடை இணைப்பிற்கான வைப்புத்தொகை என மொத்தம் ரூ.12 லட்சத்து 72 ஆயிரம் பெறப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்த முகாமில் புதிய குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களின் மனுவை விரைந்து பரிசீலனை செய்து உரியவர்களுக்கு 7 நாட்களில் ஆணை வழங்க அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். அதே போன்று குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் கோரிய விண்ணப்பங்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த முகாமில் உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர் திலகா, உதவி வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் தமிழ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story