ராமேசுவரத்தில் கரை ஒதுங்கிய பைபர் படகு


ராமேசுவரத்தில் கரை ஒதுங்கிய பைபர் படகு
x
தினத்தந்தி 14 Feb 2019 4:30 AM IST (Updated: 14 Feb 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் பைபர் படகு கரை ஒதுங்கி கிடந்தது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தை அடுத்துள்ள சேராங்கோட்டை மற்றும் கோதண்டராமர் கோவிலுக்கு இடைப்பட்ட பகுதியில் மர்மமான முறையில் பைபர் படகு நிற்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து கடலோர போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஏட்டு நாகராஜ், மற்றும் கியூ பிரிவு போலீசார் அங்கு சென்று பார்த்தனர். படகு ஒன்று கரை ஒதுங்கி நின்றது. அதில் சதீஷ் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அந்த படகில் வலைகளோ மற்றும் பொருட்களோ இல்லை. இத்தகைய பைபர் படகு ராமேசுவரம் பகுதியில் இல்லை.

ஆனால் தொண்டி, மணமேல்குடி ஆகிய பகுதியில் இத்தகைய படகுகளை மீனவர்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மணல்மேல்குடியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு சொந்தமான படகை காணவில்லை என்பதும், இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்திருப்பதும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து இந்த படகை போலீசார் புகைப்படம் எடுத்து வாட்ஸ்– அப் மூலம் அனுப்பி வைத்தனர். அதில் இந்த படகு சதீசுக்கு சொந்தமானது தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து படகுக்குரிய பதிவு புத்தகத்தை காண்பித்துவிட்டு அதனை எடுத்துச்செல்லுமாறு கடலோர போலீசார் அதன் உரிமையாளரிடம் தெரிவித்தனர்.


Next Story