அடுக்குமாடி கட்டிடத்தில் வீடு தருவதாக முதியவரிடம் ரூ.1.11 கோடி மோசடி கட்டுமான அதிபர் கைது


அடுக்குமாடி கட்டிடத்தில் வீடு தருவதாக முதியவரிடம் ரூ.1.11 கோடி மோசடி கட்டுமான அதிபர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2019 11:15 PM GMT (Updated: 13 Feb 2019 11:11 PM GMT)

அடுக்குமாடி கட்டிடத்தில் வீடு தருவதாக முதியவரிடம் ரூ.1.11 கோடி மோசடி செய்த கட்டுமான அதிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

அடுக்குமாடி கட்டிடத்தில் வீடு தருவதாக முதியவரிடம் ரூ.1.11 கோடி மோசடி செய்த கட்டுமான அதிபரை போலீசார் கைது செய்தனர்.

அடுக்குமாடி கட்டிடத்தில் வீடு

மும்பை அந்தேரியை சேர்ந்த முதியவர் திரிலோக் துசிஜா. இவர் பவாயில் கட்டுமான அதிபர் திபேஷ் பக்தானி என்பவர் கட்டி வந்த ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 10-வது மாடியில் வீடு பதிவு செய்திருந்தார். இதற்காக அவர் பல்வேறு தவணைகளாக ரூ.1 கோடியே 11 லட்சம் வரை கொடுத்தார்.ஆனால் கட்டுமான அதிபர் அவருக்கு குறிப்பிட்ட காலத்தில் வீட்டை கொடுக்கவில்லை.

இதையடுத்து திரிலோக் துசிஜா தனது மகனுடன் சென்று விசாரித்த போது, அந்த கட்டிட பணிகள் முடியாமல் இருந்தது தெரியவந்தது.

மேலும் அந்த கட்டிடம் மாநகராட்சியின் தடையில்லா சான்றிதழ் இன்றி கட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தான் கொடுத்த பணத்தை கட்டுமான அதிபரிடம் முதியவர் திருப்பி கேட்டார்.

கட்டுமான அதிபர் கைது

இதற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தந்துவிடுவதாக திபேஷ் பக்தானி கூறியிருக்கிறார். ஆனால் அவர் கூறியபடி முதியவருக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதையடுத்து அவர் மீது திரிலோக் துசிஜா போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த வழக்கு விசாரணை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கனவே ஒரு மோசடி வழக்கில் கைதாகி போலீஸ் காவலில் இருக்கும் திபேஷ் பக்தானியை இந்த மோசடி வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கட்டுமான அதிபர் திபேஷ் பக்தானி இதுவரை 8 மோசடி வழக்குகளில் கைதாகி இருப்பது தெரியவந்தது.

Next Story