புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து தர்ணா


புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் மாளிகை முன்பு  முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து தர்ணா
x
தினத்தந்தி 14 Feb 2019 1:33 AM GMT (Updated: 14 Feb 2019 4:28 AM GMT)

முதல் அமைச்சர் நாராயணசாமி விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அதிவிரைவு அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

புதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டுவரப் படும் அனைத்து திட்டங்களுக்கும் கவர்னர் ஒப்புதல் தர வேண்டும். ஆனால் கவர்னர் கிரண்பெடி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரவில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார். 

மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கவர்னர் கிரண்பெடியை கண்டித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் மாளிகை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கினார். மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு  தொண்டர்களுடன் விடிய விடிய நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

2-வது நாளாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், சென்னை, நெய்வேலியில் இருந்து அதிவிரைவுப்படை,  மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தலைமைச்செயலாளரின் கோரிக்கையை ஏற்று  மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படையினரை அனுப்பியுள்ளது. 

Next Story