பண்ருட்டி அருகே ஏரியில் மண் சரிந்து ஐ.டி.ஐ. மாணவர் பலி நண்பர்களுடன் பள்ளம் தோண்டி மணல் எடுத்தபோது பரிதாபம்


பண்ருட்டி அருகே ஏரியில் மண் சரிந்து ஐ.டி.ஐ. மாணவர் பலி நண்பர்களுடன் பள்ளம் தோண்டி மணல் எடுத்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 15 Feb 2019 4:15 AM IST (Updated: 14 Feb 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே ஏரியில் மண் சரிந்து ஐ.டி.ஐ. மாணவர் பலியானார். நண்பர்களுடன் பள்ளம் தோண்டி மணல் எடுத்தபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

புதுப்பேட்டை, 

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையம் பழைய காலனியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் மகன் செந்தமிழ்செல்வன்(வயது 19). இவர், விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருடைய பெற்றோர் வீடு கட்டி வருகின்றனர். இதற்காக அதே ஊரில் உள்ள ஏரியில் மணல் எடுத்து பயன்படுத்தி வந்தனர். வீடு கட்ட கூடுதலாக மணல் தேவைப்பட்டது.

எனவே செந்தமிழ்செல்வன், தனது நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த புஷ்பநாதன், விஜி, சந்தோஷ்குமார் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிள்களில் ஏரிக்கு சென்றனர். அந்த ஏரியில் 10 அடிக்கு மேல் தோண்டினால் தான் மணல் கிடைக்கும். எனவே செந்தமிழ்செல்வன், தனது நண்பர்களுடன் சேர்ந்து 15 அடி வரை பள்ளம் தோண்டி, மணலை எடுத்தனர். மணலை சாக்குமூட்டைகளில் அடைத்து, மோட்டார் சைக்கிள்களில் கொண்டு சென்று வீட்டில் கொட்டினர்.

நள்ளிரவில் குகைபோன்று இருந்த அந்த பள்ளத்தில் இறங்கி, செந்தமிழ்செல்வன் மணலை தோண்டிக்கொண்டிருந்தார். அவரது நண்பர்கள், மணலை வெளியே கொண்டு வந்தனர். அப்போது மண் சரிந்து, குகை போன்று இருந்த அந்த இடத்தை மூடியது. இதில் செந்தமிழ்செல்வன் சிக்கிக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், சரிந்த விழுந்த மண்ணை அகற்றினர். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த மண்ணை அவர்களால் முழுமையாக அகற்றமுடியவில்லை. இதனால் செந்தமிழ்செல்வன் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டு, மண் அகற்றப்பட்டு செந்தமிழ்செல்வனின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் விரைந்து வந்து, செந்தமிழ்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டி மணல் எடுத்தபோது மண் சரிந்து விழுந்ததில் நண்பர்கள் கண் எதிரே ஐ.டி.ஐ. மாணவர் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Next Story