ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் சிற்பங்களை பாதுகாப்பது குறித்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி


ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் சிற்பங்களை பாதுகாப்பது குறித்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 15 Feb 2019 4:30 AM IST (Updated: 15 Feb 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் சிற்பங்களை பாதுகாப்பது குறித்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த கட்டிடம் முழுவதும் கற்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளதால், பாரம்பரியம் வாய்ந்ததாக திகழ்கிறது. கடந்த காலத்தில் கல் பங்களா என்று அழைக்கப்பட்டது. அருங்காட்சியகத்தில் பாறைகள், கனிமங்கள், அஞ்சல் தலைகள், நாணயங்கள், பனை ஓலை மற்றும் மூங்கில் ஓலைச்சுவடிகள் போன்றவை சேகரித்து பராமரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் நீலகிரி வாழ் பறவைகள், விலங்குகளின் உடல்கள் பதப்படுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

ஊட்டி அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வரலாறு துறை பிரிவில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு, மரச்சிற்பங்கள், கற்சிற்பங்கள், தோல் பாவைகள், மண்பாண்டங்கள், இரும்பு வாள், ஓலைச்சுவடிகளை வேதியியல் முறையில் பாதுகாப்பது குறித்த பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமில் அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் பயிற்சி அளித்து பேசும்போது, மரச்சிற்பங்கள், கற்சிற்பங்கள் போன்றவற்றில் பாசி, பூஞ்சை மற்றும் தூசி படிந்து காணப்படும். இதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்க முடியும். சலவை சோடா, எரிசாராயம் உள்ளிட்ட வேதியியல் பொருட்களை தண்ணீருடன் கலந்து பின்னர் பிரஷ் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இந்த பயிற்சி முடிவில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறினார்.

இதுகுறித்து கல்லூரி மாணவ-மாணவிகள் கூறும்போது, நாங்கள் கையுறைகள் அணிந்து மரச்சிற்பங்கள் மற்றும் கற்சிற்பங்களை சுத்தம் செய்து பயிற்சியில் ஈடுபட்டோம். இதன் மூலம் பழங்கால சிற்பங்கள் குறித்த வரலாற்றை அறிய முடிகிறது.

மேலும் வரலாறு துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள உதவுகிறது. பயிற்சியில் அரசு மூலம் சான்றிதழ் வழங்கப்படுவதால், படிப்பை முடித்து வேலைக்கு செல்லும் போது நாங்கள் எளிதில் தேர்வாகி விடுவோம் என்றனர். பயிற்சி இன்றும் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Next Story