தஞ்சையில் களையிழந்த காதலர் தின கொண்டாட்டம் தாலிக்கயிறுடன் வந்த இந்து மக்கள் கட்சியினர் 6 பேர் கைது


தஞ்சையில் களையிழந்த காதலர் தின கொண்டாட்டம் தாலிக்கயிறுடன் வந்த இந்து மக்கள் கட்சியினர் 6 பேர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2019 4:30 AM IST (Updated: 15 Feb 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் காதலர் தின கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது. பெரியகோவில், சிவகங்கை பூங்கா பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் காதலர்களுக்கு வழங்குவதற்காக தாலிக்கயிறுடன் வந்த இந்து மக்கள் கட்சியினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை கொடுத்து அன்பை பரிமாறி கொள்வார்கள். வழக்கமாக காதலர் தினத்தன்று தஞ்சை பெரியகோவில், சிவகங்கைபூங்கா, மணிமண்டபம், அரண்மனை ஆகிய பகுதிகளில் காதல் ஜோடியினர் சந்தித்து கொள்வார்கள்.

ஆனால் காதலர் தினத்திற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, தாலி கயிறுடன் வந்து திருமணம் செய்ய வலியுறுத்தி வந்ததால் காதலர்கள் பொதுஇடங்களில் சந்தித்து கொள்வது கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

காதலர் தினமான நேற்று தஞ்சை பெரியகோவில், சிவகங்கைபூங்கா ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் காதல்ஜோடிகளின் வருகை மிக குறைவாக காணப்பட்டது. தஞ்சை சிவகங்கைபூங்காவில் ஆங்காங்கே ஒரு சில காதல்ஜோடிகளை மட்டுமே காண முடிந்தது. இதனால் தஞ்சையில் இந்த ஆண்டு காதலர் தினம் களை இழந்து காணப்பட்டது.

இதே போல் பெரிய கோவில், மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் காதலர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது. மேலும் காதலர்கள், தங்கள் காதலிக்காக ரோஜா பூக்கள் பரிசாக வழங்குவார்கள். இதற்காக சிவகங்கை பூங்கா, பெரியகோவில் பகுதிகளில் ரோஜா பூக்கள் விற்பனைக்காக அதிக அளவில் வாங்கி வைத்திருந்தனர். ஆனால் ஒரு சிலரை தவிர வேறு யாரும் ரோஜா பூக்களை வாங்கவில்லை.

இந்த நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காதல்ஜோடிகளுக்கு தாலிக்கயிறு வழங்குவதற்காக இந்து மக்கள் கட்சியினர் தஞ்சை பெரியகோவிலுக்கு வந்தனர். இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ் தலைமையில் மாவட்ட பொது செயலாளர் சுகுமார், செயலாளர் செல்வசரவணன், நகர செயலாளர் சதீஷ், துணைத்தலைவர் சிவனேசன் உள்பட 6 பேர் மஞ்சள் தாலிக்கயிறுகளுடன் வந்தனர். அப்போது பெரியகோவிலில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் பெரியகோவில் வாசல் அருகே நின்று கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story