கூடலூரில் செக்ஷன்-17 நிலத்தில் வசிப்பவர்களை வெளியேற்றும் எண்ணம் இல்லை கலெக்டர் பேட்டி
கூடலூரில் செக்ஷன்-17 நிலத்தில் வசிப்பவர்களை வெளியேற்றும் எண்ணம் இல்லை என்று கலெக்டர் கூறினார்.
கூடலூர்,
கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செக்ஷன்-17 நிலப்பிரச்சினை குறித்த விளக்க கூட்டம் நேற்று மதியம் 1 மணியளவில் தொடங்கியது. இதில் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வன அதிகாரி ராகுல் பேச தொடங்கினார். அப்போது செக்ஷன்-17 நிலத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப் படமாட்டார்கள் என்றும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் நாற்காலியில் இருந்து எழுந்து கூச்சலிட்டனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானப்படுத்தியும் அவர்கள் அமைதியாகவில்லை.
இதைத்தொடர்ந்து கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் ஆயிரக்கணக்கான மக்கள் செக்ஷன்-17 நிலத்தில் பல ஆண்டுகளாக சிறு விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் யாரையும் அரசு அங்கிருந்து வெளியேற்றாது. அந்த எண்ணமும் இல்லை. யாரும் அச்சப்பட தேவையில்லை. ஏற்கனவே 17 ஆயிரம் ஏக்கர் நிலம் வனத்துறையிடம் உள்ளது. அந்த நிலம் தான் தற்போது செக்ஷன்-16(எ) என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
செக்ஷன்-17 நிலத்தை ஆக்கிரமித்த ஒரு நபருக்கு மட்டுமே நோட்டீசு வழங்கப்பட்டு இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு அனைத்து மக்களையும் செக்ஷன்-17 நிலத்தில் இருந்து வெளியேற்றி விடுவார்கள் என்ற தவறான தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
செக்ஷன்-17 நிலத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கு 144 பேருக்கு இலவச மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் 1,344 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவர்சோலை, ஓவேலி போன்ற பகுதிகளில் செக்ஷன்-17 நிலத்தில் ரூ.10 கோடிக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களை வெளியேற்ற அரசு நினைத்தால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளுமா?. எனவே செக்ஷன்-17 நிலத்தில் வசிக்கும் மக்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடமோ அல்லது வருவாய் கோட்ட நிர்வாகத்திடமோ கேட்டு தீர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வருவாய் கோட்ட அதிகாரி ராஜ்குமார், தாசில்தார் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story