திருச்சி மாவட்டத்தில் பாலைவனமாக மாறிவரும் அகண்ட காவிரி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


திருச்சி மாவட்டத்தில் பாலைவனமாக மாறிவரும் அகண்ட காவிரி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 15 Feb 2019 4:30 AM IST (Updated: 15 Feb 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் பாலைவனமாக மாறிவரும் அகண்ட காவிரியால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

திருச்சி,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் காவிரி ஆற்று தண்ணீர் பல்வேறு பகுதிகளில் பாய்ந்து இறுதியாக நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கடலில் கலக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை வழியாக நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை வழியாக பவானி, ஈரோடு கருங்கல்பாளையம் வழியாக சோழசிராமணி சென்றடையும். பின்னர் பரமத்திவேலூர் வழியாக சென்று கரூர் அருகே கட்டளை என்னும் இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.

கரூர், திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி பரந்து விரிந்து காணப்படுவதால் காவிரியை அகண்ட காவிரி என்பதுண்டு. கரூர் அருகே ராமசமுத்திரம், மாயனூர், முசிறி, குளித்தலை, வாத்தலை வழியாக முக்கொம்புவை காவிரி வந்தடைகிறது. முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என 2 ஆறுகளாக பிரிந்து செல்கிறது. காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்தால் மட்டுமே உபரிநீராக கொள்ளிடம் தடுப்பணையில் திறந்து விடப்படும்.

முக்கொம்பில் இருந்து காவிரி ஆறு ஜீயபுரம், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை தடுப்பணை வழியாக காவிரியில் பாய்கிறது. அங்கிருந்து திருச்சி அம்மா மண்டபம் வழியாக தஞ்சை மாவட்டம் கல்லணையை சென்றடைகிறது. தமிழகத்தின் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் ஆகியவை காவிரி டெல்டா பகுதி ஆகும்.

கடந்த ஆண்டு மேட்டூர் அணை 3 முறை தனது முழு கொள்ளளவான 120 அடி நீர்மட்டத்தை எட்டியது. அதைத்தொடர்ந்து காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பல ஆண்டுகளாக மணல் பரப்பையே பார்த்து கொண்டிருந்த அகண்ட காவிரியில் இருகரைகளையும் தொடும்படி கடந்த ஆண்டு இறுதியில் தொடர்ச்சியாக திருச்சி காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின்னர், கிட்டத்தட்ட 5 ஆண்டுக்கு பிறகு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. காவிரி கரையோர மக்கள் எல்லாம் மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். காவிரி நீரை பார்ப்பதற்காகவே பொதுமக்கள் திரண்டனர்.

இப்படி ஆர்ப்பரித்து சென்ற காவிரி ஆறு தற்போது மணல்மேடாக மாறி பாலைவனம்போல காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே ஆற்றில் உள்ள பள்ளமான இடத்தில் மட்டும் தண்ணீர் குட்டைபோல தேங்கி உள்ளது. காவிரி ஆற்றில் இருந்து திருச்சி மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் தண்ணீர் ராட்சத குழாய் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. திருச்சி அகண்ட காவிரி, பாலைவனமாக உருமாறி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே, திருச்சி மாவட்டத்தில் போதிய அளவு பருவமழை பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைக்கும் வகையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. கடந்த ஆண்டு கடல்போல காட்சி அளித்த காவிரி ஆறு, இன்று மணல்மேடாகி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாலைவனமாக காட்சி அளிப்பது வேதனை அளிக்கிறது. உரிய காலத்தில் காவிரியின் குறுக்கே போதிய தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்து இருந்தால் குடிநீர் பிரச்சினைக்கு பஞ்சம் இருக்காது என்றும், எனவே, திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story