கூடலூர் அருகே இளம்பெண் மர்மசாவு உறவினர்கள் முற்றுகை போராட்டம்


கூடலூர் அருகே இளம்பெண் மர்மசாவு உறவினர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2019 10:00 PM GMT (Updated: 14 Feb 2019 7:37 PM GMT)

கூடலூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதனையடுத்து உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர்,

கூடலூர் மெயின்பஜார் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன். அவருடைய மனைவி மஞ்சு (வயது 30). இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. அதன்படி கடந்த சில வாரத்துக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த மஞ்சு, கம்பத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனையடுத்து நேற்று கம்பத்துக்கு சென்ற ரங்கநாதன், மஞ்சுவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து சென்றார். அதன்பிறகு அவர்களுக் கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து ரங்கநாதன் கடைக்கு சென்று விட்டார். சிறிதுநேரம் கழித்து அங்கு வந்து பார்த்தபோது, வீட்டின் ஒரு அறையில் மஞ்சு தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு ரங்கநாதன் கொண்டு சென்றார். அங்கு மஞ்சுவை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இந்தநிலையில் மஞ்சுவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவருடைய உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

சாவில் மர்மம் இருப்பதாக கூறியதையடுத்து, மஞ்சுவின் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக மஞ்சுவின் உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டது. ஆனால் இதற்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆம்புலன்சை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைராஜ் தலைமையிலான போலீசார், மஞ்சுவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே மஞ்சுவின் தாயார் சொர்ணம் கூடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story