அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை குறைவது கவலை அளிக்கிறது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை குறைவது கவலை அளிக்கிறது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் கிராம அரசு மேல் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடை பெற்றது. விழாவுக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரி (பொறுப்பு) ராபின்சன் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி மேற்கு அ.தி.மு.க. செயலாளர் ஆர்.ஏ. சக்திவேல் வரவேற்றுப் பேசினார். விழாவில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு 163 மாணவ - மாணவி களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். விழாவில் துணை சபாநாயகர்பேசுகையில் கூறியதாவது:-
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். இதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவ- மாணவிகள் காலதாமதம் இன்றி பள்ளிக்கு வந்து செல்லலாம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச பஸ் பாஸ், இலவச கல்வியுடன் 14 வகை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தனை வசதிகள் செய்து கொடுத்தும் அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பது தான் கவலை அளிப்பதாக உள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் அதிகரிக்கின்றது. ஆகவே அரசு பள்ளிகளிலும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
அரசு பள்ளிக்கு வருகின்ற மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் ஏழை தொழிலாளர்களாக உள்ளனர். ஆகவே அவர்கள், தங்கள் குழந்தைகள் நன்கு படித்து உயர்ந்த பதவிகளுக்கு வர வேண்டும் என்பது அவர்களின் கனவு. ஆகவே ஆசிரியர்கள் அதிக ஈடுபாட்டுடன் மாணவ-மாணவிகளுக்கு கல்வியை அளிக்க வேண்டும்.
மாணவ - மாணவிகள் பொறுப்புடன் படித்து, உயர்ந்த நிலையை அடைந்து பெற்றோர்களின் வயதான காலத்தில் நிழலாக இருந்து காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அ.தி.மு.க.பிரமுகர்கள் கோபாலபுரம் பொன்னுசாமி, ராதா மணி, கண்ணப்பன், ராஜகோபால், உதவி தலைமை ஆசிரியை உதயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளித்தலைமை ஆசிரியர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story