பராமரிப்பு பணிகள் முடிந்து பாம்பன் ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கவில்லை பயணிகள் அவதி
பாம்பன் ரெயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து ரெயில் போக்குவரத்து தொடங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமேசுவரம்,
பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந்தேதி திடீரென விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பாலத்தின் வழியாக ரெயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து கடந்த 2 மாதமாக அனைத்து ரெயில்களும் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மறுமார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
பாம்பன் பாலத்தில் நடைபெற்ற சீரமைப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்து புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. பணிகள் முடிந்து 15 நாட்களுக்கும் மேலாகி விட்டது. ஆனாலும் ரெயில் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து தென்னக ரெயில்வே அதிகாரிகள் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ராமேசுவரத்துக்கு 2 மாதத்திற்கும் மேலாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் மண்டபத்தில் வந்து இறங்கிய பிறகு பஸ் மூலம் ராமேசுவரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் சுமைகளுடன் வரும் பயணிகள்,பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி அவதிப்பட்டுவருகின்றனர்.
இதேபோல ரெயில் கட்டணத்தை விட பஸ்சில் கட்டணம் கூடுதலாக இருப்பதால் பயணிகளுக்கு கூடுதல் செலவும் ஏற்படுகிறது. எனவே இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக ராமேசுவரம் வரை அனைத்து ரெயில்களையும் இயக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story