நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.30 கோடியில் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் பூங்கா


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.30 கோடியில் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் பூங்கா
x
தினத்தந்தி 15 Feb 2019 3:45 AM IST (Updated: 15 Feb 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.30 கோடி செலவில் புதிய தகவல் தொழில்நுட்ப மென்பொருள் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

பேட்டை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.30 கோடி செலவில் புதிய தகவல் தொழில்நுட்ப மென்பொருள் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

புதிய மென்பொருள் பூங்கா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் பூங்காவும் இணைந்து கடந்த 24-ந் தேதி மென்பொருள் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்கலைக்கழகத்தில் போடப்பட்டது.

நேற்று பல்கலைக்கழக சுந்தரனார் அரங்கத்தில் வைத்து தகவல் தொழில்நுட்ப மென்பொருள் பூங்கா அமைப்பதற்கான 3 ஏக்கர் நிலம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பூங்கா ரூ.30 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ளது.

நிலம் ஒப்படைப்பு

டெல்லியில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவுடன் இணைந்து செயல்படுவதற்காக 3 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களை பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் பதிவாளர் சந்தோஷ் பாபு, கணினி துறை தலைவர் முருகன், மென்பொருள் பூங்கா அதிகாரி சஞ்சய் தியாகி, குளோபல் சாப்ட்வேர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சேகர் பொன்னையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து துணை வேந்தர் பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது,

மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு

பல்கலைக்கழகத்தில் 800 மாணவர்களாக இருந்த எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 2500-ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து, ஏ கிரேடு அந்தஸ்து வழங்கினர். 2016-ம் ஆண்டு முன்பு வரை அனைத்து கோப்புகளும் பல்கலைக்கழக பதிவாளர் அனுமதி பெற வேண்டும். ஆனால் தற்போது 18 இயக்குனர்களை நியமித்து கோப்புகளை பிரித்து அனுப்பப்பட்டு விரைவாக செயல்படுத்தப்படுகிறது. மனோ கல்லூரிகளில் பணியாற்றிய தகுதி இல்லாத 150 பேராசிரியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வளர்ச்சி பணிகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மதன்மோகன் மாளவியா விஷன் சார்பாக பல்கலைக்கழகத்திற்கு ரூ.11½ கோடி நிதி பெறப்பட்டு ஆசிரிய பயிற்சி நிலையம் தொடங்கப்படுகிறது. இதன்மூலம் 36 ஆயிரத்து 100 ஆசிரியர்கள் பயிற்சி பெற்று பயன் அடைவார்கள். சித்தா ஆயுர்வேதத்தை ஊக்குவிப்பதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு நெல்லை மாவட்டங்களில் உள்ள கோவில்களில் உள்ள தல விருட்ச மரங்கள், மருத்துவ குணம் கொண்ட மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமை வளாகமாக மாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் பல்கலைக்கழகம் இந்திய அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகமாக உருவாகும் விஷன்-2030 என்ற புத்தக தொகுப்பை வெளியிட்டார்.

Next Story