நெல்லை ஆவின் நிறுவனம் சார்பில் ரூ.10-க்கு 200 மில்லி பால் பாக்கெட் அறிமுகம்
நெல்லை ஆவின் நிறுவனம் சார்பில் ரூ.10-க்கு 200 மில்லி பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை,
நெல்லை ஆவின் நிறுவனம் சார்பில் ரூ.10-க்கு 200 மில்லி பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அறிமுக விழா
பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவன அலுவலகம் உள்ளது. அங்கு ரூ.10-க்கு நிறை கொழுப்பு மிக்க 200 மில்லி பால் பாக்கெட் அறிமுகம் மற்றும் விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு நெல்லை ஆவின் தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கி, புதிய 200 மில்லி பால் பாக்கெட்டை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இரண்டாவது வெண்மை புரட்சி ஏற்படுத்தும் வகையில் ஆவின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு லட்சம் லிட்டர் இலக்கு
தினமும் ஒரு லட்சம் லிட்டர் கொள்முதல் என்ற இலக்கை எட்டும் வகையில் ஏழை பெண்களுக்கு கடனுதவியுடன் கறவைமாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருகிற 25-ந் தேதி சங்கரன்கோவிலில் நடக்கும் விழாவில் 1,000 கறவை மாடுகள் ஏழைகளுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த விழாவில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
ஓட்டல் ஸ்பெஷல் என்ற சத்து மிகுந்த அடர்த்தியான ஆவின் பால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தனியார் பால் நிறுவனங்களை விட மிகவும் குறைவான விலையில் வழங்கப்பட உள்ளது. டீக்கடைகள், ஓட்டல்கள் தங்கள் கடைகளுக்கு தேவையான அடர்த்தியான ஆவின் பாலை அந்தந்த பகுதியில் உள்ள முகவர்கள் மூலம் கொள்முதல் செய்யலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு...
மேலும் ஓட்டல்கள் மற்றும் திருமணம் போன்ற இதர நிகழ்ச்சிகளுக்கு தேவையான பாலை பாக்கெட்டுகள் இல்லாமல் கேன்களில் அடைத்து வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுதவிர சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனிப்பு இல்லாத பால்கோவா தேவையின் அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். தரமான தயிர் கப்புகளில் அடைக்கப்பட்டு 100 மில்லி ரூ.10-க்கும், 200 மில்லி ரூ.18-க்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் ரெங்கநாததுரை, உதவி பொது மேலாளர்கள் அருணகிரிநாதன், தனபாலன், ஸ்ரீபன், திவான் ஒலி, சாந்தி மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story