மோடி அரசு ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 68 கோடி வழங்கியுள்ளது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை பா.ஜனதா தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டு


மோடி அரசு ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 68 கோடி வழங்கியுள்ளது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை பா.ஜனதா தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Feb 2019 11:30 PM GMT (Updated: 14 Feb 2019 8:29 PM GMT)

தமிழகத்துக்காக மோடி அரசு ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 68 கோடி வழங்கியுள்ளது. ஆனால் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டி பேசினார்.

ஈரோடு,

பா.ஜனதா கட்சி சார்பில் சக்தி கேந்திரா சம்மேளனம் என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை கட்சித்தலைவர்கள் சந்திக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் ஈரோடு அருகே உள்ள சித்தோடு ஸ்ரீநகர் பகுதியில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி. மற்றும் பா.ஜனதா முக்கிய நிர்வாகிகளான முரளதரராவ், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், எஸ்.கே.கார்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று ஈரோடு வந்தார்.

பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொங்கு மண்ணின் மொழி மிகவும் இனிமையானது. இங்கு எதிரியை பேசுவது என்றால் கூட மரியாதையாக பேசுவார்கள். ஆனால், எனது மொழி அப்படி இனிமையானது அல்ல. எனவே நான் திராவிடக்கட்சிகளைப்பற்றி பேசும்போது இனிமையாக பேசுவேன் என்று எதிர்பார்க்க முடியாது.

வர இருக்கும் தேர்தலில் 2 விதமான கூட்டணி அமைய இருக்கிறது. ஒன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் தி.மு.க. இணைந்திருக்கும் கூட்டணி. இன்னொரு கூட்டணி நரேந்திர மோடியை பிரதமராக ஏற்று இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு ஜனநாயக கூட்டணியே இல்லை. நம்முடைய கூட்டணிதான் ஜனநாயக முறையில் அமைந்திருக்கும் கூட்டணி. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி இந்த நாட்டின் வளர்ச்சிக்கான கூட்டணி அல்ல. அது அவர்களின் குடும்ப வளர்ச்சிக்கான கூட்டணி. ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு வழி வகுக்கும் கூட்டணி.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு என்ன செய்தது? என்று கேட்டு இருக்கிறார். அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சொல்லவும் போவதில்லை. ஆனால் தமிழக மக்களுக்கு நான், பா.ஜனதாவின் நரேந்திர மோடி தலைமையிலான அரசு என்ன வளர்ச்சித்திட்டங்களை தமிழகத்துக்கு செய்து இருக்கிறது என்று சொல்ல வேண்டியது உள்ளது.

சென்னையில் இருந்து சேலத்துக்கு விமான சேவையின் மூலம் ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் பயன் அடைகிறார்கள். திருப்பூரில் 100 படுக்கை வசதி கொண்ட தொழிலாளர் நல மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு என கொங்கு மண்டலத்தில் அதிக ஸ்மார்ட் சிட்டிகள் வழங்கப்பட்டு உள்ளன. எண்ணெய் ஏற்றுமதி 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. பொள்ளாச்சியில் எண்ணெய் வாரிய அலுவலகம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. 2ஜி ஊழலால் தமிழகத்துக்கு அவப்பெயர்தான் ஏற்பட்டது. ஆனால் நரேந்திரமோடி ராணுவத்துக்கு தளவாட பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழகத்துக்கு தந்து இருக்கிறார். 15 ஆண்டுகால கனவாக இருந்த, திருப்பூரை சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை ரூ.200 கோடி செலவில் அமைத்து இருக்கிறோம். இது சிறு தொழில் முனைவோருக்கு மிகுந்த பயன் உள்ளதாக அமைகிறது.

நாடு முழுவதும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி பியூஸ்கோயல் அறிவித்தார். இந்த திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பல லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். பிரதமர் மோடியின் அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுப்பதை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏளனமாக பேசுகிறார். காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசு விவசாயிகளுக்கு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஆனால் பிரதமர் மோடி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடியை விவசாயிகளுக்கு மானியமாக வழங்கி இருக்கிறார். மீனவர்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை பிரதமர் மோடி அமைத்து இருக்கிறார்.

இதுவரை இல்லாத வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீட்டினை பிரதமர் மோடி அறிவித்து இருக்கிறார்.

கடந்த ஆட்சியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போது 13-வது நிதிக்குழுவில் மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதி ரூ.94 ஆயிரத்து 540 கோடி. ஆனால் பா.ஜனதா அரசின் பிரதமர் நரேந்திர மோடி 14-வது நிதிக்குழுவில் தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதி ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 68 கோடி. இதில் எது அதிகம்?. தி.மு.க. கூட்டணி ஒதுக்கிய நிதியை விட பா.ஜனதா ஒதுக்கியது 5.2 மடங்கு அதிகமாகும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, ரூ.1,200 கோடியில் ஜவுளி பூங்காக்கள், சென்னை மெட்ரோ ரெயிலுக்கு ரூ.2 ஆயிரத்து 800 கோடி, மோனோ ரெயிலுக்கு ரூ.3 ஆயிரத்து 200 கோடி, தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ரூ.23 ஆயிரம் கோடி, பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடி, ஸ்மார்ட் சிட்டிகளுக்கு ரூ.828 கோடி, அம்ருத் திட்டத்துக்கு ரூ.4 ஆயிரத்து 700 கோடி, மாநில சாலைகள் அமைக்க ரூ.23 ஆயிரம் கோடி, மத்திய அரசின் சாலைகள் அபிவிருத்தி திட்டத்துக்கு ரூ.2 ஆயிரத்து 100 கோடி, இனயம் துறைமுகத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி, சாகர்மாலா திட்டத்துக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி என்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இது நரேந்திர மோடியின் அரசு தமிழக மக்களுக்கு கொடுத்தது. இதுபோல் ஏதேனும் புள்ளிவிவரங்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அளிக்க முடியுமா?.

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகம் வளர்ச்சி அடையாது.

இவ்வாறு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.

மேலும் அவர் தனது பேச்சை முடிக்கும்போது மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைய வேலை செய்வீர்களா? என்று கட்சி நிர்வாகிகளைப்பார்த்து 2 முறை, கேட்டார். அப்போது நிர்வாகிகள் செய்வோம் என்று உரத்த குரல் எழுப்பினார்கள். இதுபோல் பேச்சை முடிக்கும்போது, மீண்டும் மோடி ஆட்சி என்ற கோஷத்தை கைகளை உயர்த்தி 3 முறை எழுப்பினார். அப்போது அனைவரும் கைகளை உயர்த்தி திரும்ப கூறி கோஷம் எழுப்பினார்கள்.

இதுபோல் பேச்சை தொடங்கும்போது ‘பாரத் மாதாகி ஜே’ என்று சத்தமாக கோஷமிட செய்த அவர், ஈரோட்டில் ஒலிக்கும் கோஷம் புதுடெல்லியில் இருக்கும் பிரதமர் மோடிக்கு கேட்க வேண்டும் என்று கூறி உற்சாகப்படுத்தினார்.

முன்னதாக ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலியில் நடந்த கைத்தறி, விசைத்தறி, ஜவுளித்துறையினருக்கான ஆலோசனை கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜவுளித்துறையில் பல்வேறு பின்னடைவுகள் உள்ளன. அவற்றை எல்லாம் மாற்றும் வகையில் மத்திய பா.ஜனதா அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து உள்ளது. தமிழகத்துக்கு ஜவுளித்துறைக்காக ரூ.1,230 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய அளவில் 12 சதவீதமாகும். ஜவுளி பூங்காக்களுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கும் ரூ.394 கோடியில் ரூ.121 கோடி தமிழகத்துக்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 17 ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் அறிவிக்கப்பட்டு 6 பூங்காக்கள் செயல்பாட்டுக்கு வந்து உள்ளன. இதற்கு ரூ.5 ஆயிரத்து 114 கோடி முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. 17 ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் மூலம் 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விசைத்தறி மேம்பாட்டுக்காக ரூ.161 கோடி மானியம் வழங்கப்பட்டு இருக்கிறது. மொத்த மானியத்தில் 65 சதவீதம் தமிழகத்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே தமிழக நெசவாளர்களுக்கு நரேந்திர மோடியின் அரசு ஏராளமான சலுகைகள் வழங்குகிறது. எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினருக்கு 20 முதல் 42 சதவீதம் மானியம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.36 ஆயிரம் கோடியாகும். விசைத்தறி தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக ரூ.826 கோடி நிதி வழங்கப்பட்டு இருக்கிறது. வருகிற 3 ஆண்டுகளில் திருப்பூரில் ரூ.487 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. சிறப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வரை 50 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு முழுமையான வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதுபோன்று ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது எங்கள் மேலான ஆலோசனைகள் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். அடுத்த 5 ஆண்டுகளில் அவை நிறைவேற்றப்படும்.

மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில் மேலும் பல வளர்ச்சித்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார். முன்னதாக நெசவாளர்கள், ஜவுளித்துறையினர் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். பெரும்பாலானவர்கள் ஜவுளித்துறைக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜனதா தமிழக நெசவாளர் அணி தலைவர் பாலமுருகன், ஈரோடு மாவட்ட பா.ஜனதா தலைவர் சிவசுப்பிரமணி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் என்.பி.பழனிச்சாமி, ஏ.சரவணன், கிருஷ்ணகுமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் டெக்ஸ்வேலி வளாகத்துக்கு வந்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா, நிகழ்ச்சிகள் முடிந்ததும் மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.

Next Story