மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு 7 ஆயிரத்து 500 பணியாளர்கள் தேர்வு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு 7 ஆயிரத்து 500 பணியாளர்கள் தேர்வு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 15 Feb 2019 3:15 AM IST (Updated: 15 Feb 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு 7 ஆயிரத்து 500 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு 7 ஆயிரத்து 500 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னேற்பாடு பணிகள்

பாராளுமன்ற தொகுதி தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இதனால் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது சட்டமன்ற தொகுதி அளவிலான முதன்மை பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 36 குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்குச்சாவடி வாரியாக சென்று வாக்குப்பதிவை காண்பிக்கும் எந்திரம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வாக்குச்சாவடிகள்

மாவட்டத்தில் 1593 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா, மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஒரு வாக்குச்சாவடியில் 1400-க்கு அதிகமான வாக்காளர்கள் இருந்தால், கூடுதல் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். அதன்படி ஏதேனும் வாக்குச்சாவடி அமைக்க வேண்டி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இது போன்ற நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

மேலும் தேர்தல் பணிக்கு மொத்தம் 7 ஆயிரத்து 500 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கணக்கெடுப்பு

தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை அறிவித்து உள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் வரவில்லை. அதே நேரத்தில் ஏழை, எளிய மக்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணி விரைவில் முடிக்கப்படும். தகுதியான அனைவருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும். இதே போன்று பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகை 3 கட்டமாக வழங்கப்படும். ஒரு பயனாளி 2 திட்டங்களிலும் பயன்பெறவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சட்டமன்ற தொகுதி அளவிலான முதன்மை பயிற்சியாளர்களுக்கான வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவை காண்பிக்கும் எந்திரம் குறித்த பயிற்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தேர்தல் பிரிவு தாசில்தார் நம்பிராயர், நாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story