கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் துணைப்பதிவாளர் தகவல்


கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் துணைப்பதிவாளர் தகவல்
x
தினத்தந்தி 15 Feb 2019 3:30 AM IST (Updated: 15 Feb 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று துணைப்பதிவாளர் மணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான தபால் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முதல்வரும், ஈரோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளருமான ப.மணி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களில் இதுவரை கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி பெறாமல் உள்ளவர்கள் இந்த பயிற்சியை பெறலாம். அதற்காக தபால் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியை பெறுவதன் மூலம் பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடு அடைய வாய்ப்பு உள்ளது. இதில் கூட்டுறவு மேலாண்மை பட்டயத்துடன் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, கணினி பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படும். விடுமுறை தினங்களில் மட்டும் தொடர்ந்து 36 வாரங்கள் பயிற்சி நடத்தப்படும். இதற்கான கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். இதேபோல் பயிற்சி கட்டணம் ஜி.எஸ்.டி. உள்பட ரூ.12 ஆயிரத்து 920 வசூலிக்கப்படும்.

பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பத்தை ஈரோடு அருகே கொங்கம்பாளையம் வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் துணைப்பதிவாளர் ப.மணி கூறிஇருந்தார்.

Next Story