ஈரோட்டில் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
ஈரோட்டில கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு,
ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி ஜெயா. பெரியசாமி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் ஜெயா தனது மகள் காயத்திரியை (வயது 17), ஈரோடு ஏ.பி.டி. ரோடு கோட்டையார் வீதியில் உள்ள அவருடைய அக்காள் சரசு வீட்டில் விட்டிருந்தார்.
அங்கிருந்தபடி காயத்திரி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை காயத்திரி, ஈரோடு முத்தம்பாளையம் நேரு வீதி பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றார்.
அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்தபோது அவர், உடன் இருந்தவர்களிடம் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி அருகில் சென்றார். பின்னர் அவர் அங்குள்ள 60 அடி ஆழ கிணற்றில் திடீரென குதித்து விட்டார். அந்த கிணற்றில் 30 அடி ஆழம் தண்ணீர் இருந்ததால் காயத்திரி தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் அவர் தண்ணீருக்குள் மூழ்கினார்.
உடனே இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி சுமார் ½ மணி நேரம் போராடி காயத்திரியை பிணமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து காயத்திரியின் உடலை ஈரோடு தாலுகா போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ‘தன்னுடன் தாய், தந்தை இல்லாததால் மனம் உடைந்து காயத்திரி தற்கொலை செய்து கொண்டது’ தெரிய வந்தது.
Related Tags :
Next Story