குன்னத்தூர் அருகே கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்தனர் மனைவி பலி-கணவருக்கு தீவிர சிகிச்சை
குன்னத்தூர் அருகே கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்தனர். இதில் மனைவி பலியானார். ஆபத்தான நிலையில் உள்ள கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குன்னத்தூர்,
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள தட்டாஞ்செறை குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 49). இவரது மனைவி மாதேஸ்வரி (39). இவர்களுக்கு நந்தினி (16), தமிழரசி (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் செங்கப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 மற்றும் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
ரவிசங்கரின் சொந்த ஊர் திருப்பூர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குருவாயூரப்பன் நகரில் இடம் வாங்கி சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பூரில் நந்தினி யார்ன்ஸ் என்ற பெயரில் நூல் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்த கம்பெனியை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து பார்த்து வந்தனர்.
கம்பெனிக்கு தேவையான நூல்களை வாங்கியதில் சிலருக்கு ரவிசங்கர் பணம் கொடுக்க வேண்டியது இருந்தது. மேலும் மனைவி மாதேஸ்வரி பெயரில் வள்ளிபுரம் கிராமத்தில் காலி இடம் உள்ளது. இதை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு பவர் கிரையம் செய்து கொடுத்துள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் வேறு ஒருவருக்கு விற்று விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக ரவிசங்கருக்கு வரவேண்டிய பணம் வரவில்லை. அத்துடன் அவரை அலைக்கழித்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் கடன் பிரச்சினை காரணமாக காலி இடத்தை விற்றனர். அந்த பணமும் அவர்களுக்கு வராததால் கணவன்-மனைவி இருவரும் மிகவும் மனவேதனை அடைந்தனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு தனது மூத்த மகள் நந்தினியை அழைத்து யார் யாருக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு காசோலை கொடுத்துள்ளேன். யாரிடம் இருந்து நமக்கு பணம் வரவேண்டும் என்ற விவரத்தை கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை 5.30 மணிஅளவில் ரவிசங்கரும் , மாதேஸ்வரியும் ஏற்கனவே வாங்கிவைத்திருந்த சாணிப்பவுடரை (விஷம்) கரைத்து குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் வாந்தி எடுத்தனர். உடனடியாக அக்கம்பக்கத் தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர்கள் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாதேஸ்வரி இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ரவிசங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியினர் கடன் தொல்லை காரணமாக விஷம் குடித்தார் களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story