திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக ரத்தம் ஏற்றி காப்பாற்றப்பட்ட காங்கேயம் இன மயிலை பசு


திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக ரத்தம் ஏற்றி காப்பாற்றப்பட்ட காங்கேயம் இன மயிலை பசு
x
தினத்தந்தி 15 Feb 2019 4:00 AM IST (Updated: 15 Feb 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக முத்தூரில் நோய் தாக்குதலுக்கு உள்ளான காங்கேயம் இன மயிலை பசுமாடு ரத்தம் ஏற்றப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளது.

முத்தூர், 

முத்தூர்-பெருமாள்புதூர், தோட்டத்தூரை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 35) விவசாயி. இவர் தனது விவசாய பணிகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும், பொருளாதார நிலையை மேம்படுத்தவும் கால்நடைகளை வளர்த்தி வருகிறார். இதில் மாடுகள் இனத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட காங்கேயம் இன மயிலை, செவளை, காரி பசுமாடுகள், கன்றுகளை மட்டுமே வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது 6 பல் கொண்ட மயிலை பசுமாடு ஒன்று கடந்த வாரம் மாட்டின் மேல் ஒட்டியிருக்கும் உண்ணி பூச்சி கடித்ததில் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தது. இதனை தொடர்ந்து மூத்தாம்பாளையம் அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர்.தமிழ்செல்வன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் உடனடியாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த மாட்டிற்கு பரிசோதனை செய்து குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்தனர்.

இந்த சிகிச்சை காரணமாக பசுமாட்டிற்கு காய்ச்சல் 90 சதவீதத்திற்கு மேல் குறைந்தது. ஆனால் அந்த மயிலை பசுமாட்டினால் மேலே எழுந்து நிற்க முடியவில்லை. இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவக்குழுவினர் நேற்று மாலை மற்றொரு நல்ல ஆரோக்கியமான நிலையில் இருந்த மயிலை பசுமாட்டில் இருந்து 2 லிட்டர் ரத்தம் வெளியே எடுக்கப்பட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த பசுமாட்டிற்கு செலுத்தப்பட்டது. ரத்தம் செலுத்தப்பட்ட 2 மணி நேரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்த காங்கேயம் இனமயிலை பசுமாடு புத்துணர்ச்சி அடைந்து எழுந்து நின்றது.

இதுபற்றி கால்நடை மருத்துவக்குழுவினர் கூறியதாவது :-

நோய் உண்ணி தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்த காங்கேயம் இன மயிலை பசுமாட்டிற்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளித்து குணப்படுத்திய பிறகும் எழுந்து நிற்க முடியவில்லை. மேலும் சுறுசுறுப்பின்றி படுத்த நிலையிலேயே இருந்தது.

இதனை தொடர்ந்து வேலூர் மாவட்டம் நெல்மானூர் வெட் பேக் கால்நடை மருந்து பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து தமிழகத்திலேயே எங்கும் கிடைக்காத கால்நடை ரத்த சேகரிப்பு பை ரூ.1000-க்கு வாங்கி வரப்பட்டு மற்றொரு மயிலை பசுமாட்டில் இருந்து ரத்தம் வெளியே எடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டது.

பொதுவாக முதன் முதலில் ஒரு மாட்டில் இருந்து இன்னொரு மாட்டிற்கு ரத்தம் செலுத்தும் போது ரத்த வகை பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது இல்லை. இதனை தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த மயிலை பசுமாட்டிற்கு உடனடியாக மற்றொரு மாட்டின் நல்ல ரத்தம் செலுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டது. ரத்தம் செலுத்திய 2 மணி நேரத்திலேயே மாடுஎழுந்து நிற்கும் அளவிற்கு வந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் இந்த மயிலை பசுமாடு நன்கு தீவனம் உண்ணும் அளவிற்கு வந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாக மனிதனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் நேரங்களில் ரத்தம் தேவைப்படும் போது மற்றொரு ரத்ததானம் அளித்தவரிடமிருந்து உடனடியாக என்ன வகை ரத்தம் தேவை என்பதை கண்டறிந்து ரத்த வங்கியில் இருந்து ரத்தம் கொண்டு வரப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு ஏற்றி உயிர் காப்பாற்றப்படும் நிகழ்வு நடைமுறையில் உள்ளது.

ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக கால்நடை இனமான காங்கேயம் இனமான மயிலை பசுமாடு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மற்றொரு மாட்டில் இருந்து ரத்தம் பிரித்தெடுக்கப்பட்டு அந்த நோய் தாக்கப்பட்ட பசுமாட்டிற்கு ஏற்றி உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story