காதலர் தினத்தையொட்டி திருப்பூர் மாநகராட்சி பூங்காவில் காதலி கிடைக்கமாட்டாளா? ரோஜாப்பூவுடன் காத்திருந்த வாலிபர் ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
காதலர் தினத்தையொட்டி திருப்பூர் மாநகராட்சி பூங்காவில் காதலி கிடைக்கமாட்டாளா? என்று ரோஜாப்பூவுடன் வாலிபர் ஒருவர் காத்திருந்தார். மாலை வரை காத்திருந்த அவர் கடைசியில் ஏமாற்றத்துடனேயே திரும்பி சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர்,
பிப்ரவரி மாதம் 14-ந்தேதி காதலர் தினமாக ஆண்டுதோறும் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் காதலி அல்லது காதலன் தனது காதலை தெரிவிக்கும் ஒரு மரபு இருந்து வருகிறது. புனிதமான காதலை தெரிவிக்கும் நாளாக இந்த நாள் பார்க்கப்பட்டு வந்தாலும், தற்போது ‘காதலர் தினம்’ என்ற பெயரில் பொது இடங்களில் வரம்பு மீறும் செயலும் அதிகம் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு அமைப்பினரும் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் நாளுக்கு நாள் இந்த தினம் காதலர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நாளில் தனக்கான இணை இருப்பவர்கள் அவர்களுடன் பூங்கா, சினிமா அல்லது சுற்றுலா பகுதிகளுக்கு சென்று தங்கள் அன்பை பரிமாறி வருவார்கள். தனக்கான இணை இல்லாதவர்கள் ஏக்கத்துடன் இந்த நாளை கழிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
காதலர் தினத்தையொட்டி தனக்கும் ஒரு காதலி கிடைக்கமாட்டாளா? என்ற ஏக்கத்தில் பூங்காவில் வாலிபர் ஒருவர் கையில் ரோஜாப்பூவுடன் சுற்றித்திரிந்த சம்பவம் திருப்பூரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி பூங்காவிற்கு நேற்று காலையில் இருந்தே ஏராளமான காதலர்கள் தங்கள் ஜோடியுடன் வந்தனர். அவர்கள் அருகருகே அமர்ந்து பேசியபடி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டிருந்தனர். பலர் தாங்கள் வாங்கி வந்திருந்த சாக்லேட், ரோஜாப்பூ மற்றும் பரிசு பொருட்களை பகிர்ந்து கொண்டனர். போலீசாரும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பூங்காவில் வாலிபர் ஒருவர் தனது கையில் ரோஜாப்பூவுடன் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் பல மணி நேரமாக கையில் ரோஜாப்பூவுடன், கண்களில் ஏக்கத்துடன் அந்த பூங்காவில் தன் காதலை யாராவது ஏற்க மாட்டார்களா? என அங்கு காத்திருந்தார். அங்கு அமர்ந்திருந்த அனைத்து காதலர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வையும் அந்த வாலிபர் மீதே இருந்தது.
இதுபற்றி அறிந்ததும் அந்த வாலிபரை அழைத்து அவரிடம் இதுகுறித்து சிலர் விசாரித்தனர். அப்போது, “பேச தொடங்கியதும் ஏங்கி ஏங்கி அழ தொடங்கிய அவர், எனது பெயர் சண்முகபிரகாஷ்(வயது 28). சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியாகும். தற்போது திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் ரோட்டில் மகாலட்சுமிநகர் பகுதியில் தங்கி இருந்து செல்போன் கடையில் வேலை செய்து வருகிறேன்“ என்றார்.
மேலும், “எனது பெற்றோர் பல வருடங்களாக எனக்கு பெண் பார்த்து வருகின்றனர்.
இதற்காக இடைத்தரகர்களிடம் சுமார் ரூ.60 ஆயிரம் வரை செலவழித்து விட்டனர். ஆனால் இதுவரை பெண் அமையவில்லை. இதனால் தற்போது, உனக்கு பிடித்த பெண்ணை பார்த்துக்கொள் என்று என்னிடம் சொல்லி விட்டனர். இதனால் எனக்கான காதலியை தற்போது தேடிக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் அவளை தேடி கண்டுபிடித்து இந்த ரோஜாப்பூவை அவளிடம் கொடுத்து எனது காதலை சொல்லி விட்டு தான் இங்கிருந்து செல்வேன்“ என்று கண்ணீர் மல்கியபடி கூறினார்.
இதைப்பார்த்து கொண்டிருந்தவர்கள் பரிதாபமாக அந்த வாலிபரை பார்த்தாலும், அவரிடம் எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியாமல் சிலர் விழித்தனர். பதில் கூறிவிட்டு மாலை வரை அந்த பூங்காவையே சுற்றி வந்த அந்த வாலிபருடன் சிலர் செல்பியும் எடுத்துக்கொண்டனர். ஆனால் கடைசி வரை அவருக்கு காதலி கிடைக்கவில்லை. கையில் வைத்திருந்த ரோஜாப்பூவோடு, அவரது இன்முகமும் வாடிப்போனது. இதனால் தான் தேடிவந்த காதலி கிடைக்காத ஏமாற்றத்துடனேயே மீண்டும் தனது அறைக்கு திரும்பி சென்றார்.
Related Tags :
Next Story