டெல்லி ஓட்டல் தீ விபத்தில் பலியான பனியன் ஏற்றுமதி நிறுவன ஊழியர் உடல் திருப்பூரில் தகனம்


டெல்லி ஓட்டல் தீ விபத்தில் பலியான பனியன் ஏற்றுமதி நிறுவன ஊழியர் உடல் திருப்பூரில் தகனம்
x
தினத்தந்தி 15 Feb 2019 3:00 AM IST (Updated: 15 Feb 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி சொகுசு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவன ஊழியர் உடல் திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

அனுப்பர்பாளையம்,

டெல்லியில் பனியன் ஏற்றுமதியாளர்களுக்கான சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்காக திருப்பூரில் உள்ள ஈஸ்ட்மேன் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் முதன்மை மெர்ச்சண்டைசர்களாக பணியாற்றி வந்த திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ராக்கியாபாளையம் வெற்றிவேல்நகரை சேர்ந்த அரவிந்த் (வயது 45) மற்றும் கோவை மாவட்டம் சோமனூரை அடுத்த செம்மாண்டம் பாளையத்தை சேர்ந்த நந்தகுமார்(31) ஆகியோர் கடந்த 10-ந் தேதி டெல்லி சென்றனர்.

அவர்கள் பனியன் ஏற்று மதியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் டெல்லி கரோல் பார்க் பகுதியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலின் 2-வது தளத்தில் அறையில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் ஓட்டலின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஓட்டலில் தங்கியிருந்த அரவிந்த், நந்தகுமார் உள்பட 17 பேர் இறந்தனர்.

தீவிபத்தில் பலியான அரவிந்த், நந்தகுமார் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் பணியாற்றி வந்த ஈஸ்ட்மேன் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தினரும், குடும்பத்தினரும் மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து டெல்லியில் அவர்கள் இருவரின் உடல்களும் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலை தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்கள் இருவரின் உடல்களும் அவர்கள் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. அரவிந்தின் உடல் ராக்கியாபாளையம் வெற்றி வேல் நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அரவிந்தின் உடலை பார்த்து அவருடைய தந்தை சுகுமாரன், மனைவி தேவிகா, மகன் பூஜித், மகள் கனிஷ்கா மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இது காண்போரை கண்கலங்க செய்தது. அரவிந்த் உடலுக்கு பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் அரவிந்தின் உடல் அவருடைய வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்து செல்லப்பட்டு ஆத்துப் பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அரவிந்தின் இறுதிச்சடங்கில், அவர் பணியாற்றிய பனியன் ஏற்றுமதி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பலர் கண்ணீர் மல்க கலந்துகொண்டனர்.

Next Story