தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த தொழிலாளி சாவு


தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 14 Feb 2019 10:15 PM GMT (Updated: 14 Feb 2019 9:39 PM GMT)

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர், பணத்தை திருப்பிக் கொடுக்காததால் தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 62). கூலித்தொழிலாளி. இவர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா பகுதிக்கு சென்ற அவர், திடீரென தான் வைத்திருந்த பைக்குள் இருந்து கேனை எடுத்து அதில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் முனியாண்டியின் உடல் முழுவதும் தீயில் கருகியது. உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், முனியாண்டி தனது மகன் பாலமுருகன் (25) மற்றும் உறவினர்கள் கோவிந்தராஜன், அழகுராஜன் ஆகியோருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிய மனுவேல் மகள் மரியசெல்வம் என்பவரிடம் சுமார் ரூ.18 லட்சம் கொடுத்ததாகவும், அவர் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய இடங்களில் முனியாண்டி புகார் செய்து இருந்தார். இந்த புகார் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் புகார் தொடர்பான விசாரணைக் காக பாலமுருகன், கோவிந்தராஜன், அழகுராஜன் ஆகியோர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் வந்த முனியாண்டி கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு சென்று விரக்தியில் தீக்குளித்ததாக தெரியவந்தது.

முனியாண்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முனியாண்டி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அன்னை இந்திரா நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முனியாண்டியின் உறவினர்கள் பலர் மருத்துவமனைக்கு வந்து இருந்தனர். இதற்கிடையே மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்த முனியாண்டியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடித்ததே அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக அமைந்து விட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்

Next Story