மதுரை மாவட்டத்தில் மேலும் ஒரு சம்பவம்: போலீஸ் ஏட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


மதுரை மாவட்டத்தில் மேலும் ஒரு சம்பவம்: போலீஸ் ஏட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 15 Feb 2019 4:00 AM IST (Updated: 15 Feb 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் மேலும் ஒரு சம்பவமாக போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக முடிவுக்கான காரணம் குறித்து அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

மதுரை, 

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சாப்டூரை சேர்ந்தவர் ராமர்(வயது 29). இவர் தற்போது மதுரை 6-வது பட்டாலியனில் ஏட்டு ஆக பணியாற்றி வந்தார். இவர் தனது அக்காள் மகள் ஆனந்தம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராமர் பணி காரணமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சாப்டூரில் வசித்து வருகிறார்கள்.

மேலும் இவருக்கு ஆயுதப்படை குடியிருப்பிலும் வீடு உள்ளது. கடந்த சில நாட்களாக அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்ததுடன் இருந்து வந்தார். தேனி மாவட்டத்தில் பணியில் இருந்த அவருக்கு பதவி உயர்வு வரவிருந்ததாகவும், அந்த பதவி உயர்வுக்கான பயிற்சி பெற மதுரை ஆயுதப்படைக்கு சில தினங்களுக்கு முன்பு வந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்தநிலையில் நேற்று முன்தினம் பயிற்சி எடுத்துவிட்டு, அங்குள்ள வீட்டிற்கு சென்று தங்கினார். நேற்று காலை 5 மணிக்கு அவர் பயிற்சிக்கு வரவில்லை. இதனால் உடன் வேலை பார்த்தவர்கள் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அதனை அவர் எடுக்கவில்லை.

இதனால் ராமரை அழைத்து வர போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. ஒருவேளை அசதியில் தூங்கியிருக்கலாம் என்ற எண்ணத்தில் போலீசார் கதவை வெகுநேரமாக தட்டினர். ஆனால் ராமர் கதவை திறக்கவில்லை. இதன்காரணமாக சந்தேகம் அடைந்த போலீசார் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும், தல்லாகுளம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தல்லாகுளம் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராமர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஏட்டு ராமர் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் சோதனை செய்த போது ராமர் எழுதியதாக கடிதம் ஒன்று சிக்கியது.

அதில் “குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், எனது சாவுக்கு யாரும் காரணமில்லை” என உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சதீஸ் என்ற போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த சம்பவம் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மதுரையில் ஏட்டு ராமர் தற்கொலை செய்து கொண்டது போலீசார் மத்தியில் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இது போன்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்கொலைகளுக்கான பின்னணி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story