புற்றுநோயாளியை ஏமாற்றிய கட்டுமான அதிபரை பந்தாடிய நவநிர்மாண் சேனாவினர் சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவுகிறது


புற்றுநோயாளியை ஏமாற்றிய கட்டுமான அதிபரை பந்தாடிய நவநிர்மாண் சேனாவினர் சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவுகிறது
x
தினத்தந்தி 15 Feb 2019 4:45 AM IST (Updated: 15 Feb 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

புற்றுநோயாளியை ஏமாற்றிய கட்டுமான அதிபரை நவநிர்மாண் சேனாவினர் பந்தாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

மும்பை,

புற்றுநோயாளியை ஏமாற்றிய கட்டுமான அதிபரை நவநிர்மாண் சேனாவினர் பந்தாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

புற்றுநோயாளியிடம் மோசடி

மும்பையை சேர்ந்த புற்றுநோயாளியான பால்வந்த் சூரியவன்சி, வீடு வாங்குவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு பால்கர் மாவட்டம் விராரை சேர்ந்த கட்டுமான அதிபர் ராஜூ செட்டியிடம் ரூ.17 லட்சம் கொடுத்து உள்ளார். ஆனால் அவர் வீடு கட்டி கொடுக்கவில்லை. மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதையடுத்து அவர் தனது புற்றுநோயை குணப்படுத்துவதற்காக பணத்தை தரும்படி கேட்டுள்ளார். ஆனால் கட்டுமான அதிபர் அதற்காக, பலமுறை அலைய வைத்து ரூ.5 ஆயிரம் மட்டும் கொடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் பல முறை போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பால்வந்த் சூரியவன்சி மோசடி குறித்து நவநிர்மாண் சேனா பிரமுகர் நிதின் நந்காவ்கரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்று விரார், கோகுல் டவுன்சிப்பில் உள்ள நவநிர்மாண் சேனா அலுவலகத்திற்கு கட்டுமான அதிபர் ராஜூ செட்டி வரவழைக்கப்பட்டார். அங்கு வைத்து நவநிர்மாண் சேனாவை சேர்ந்தவர்கள் கட்டுமான அதிபரை பந்தாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சரமாரியாக தாக்கினர்

அந்த வீடியோவில், புற்றுநோயாளியை நீ சொல்ல முடியாத அளவிற்கு அலைய வைத்து உள்ளாய், தினமும் பணத்தை கேட்டு உன்னை சந்திக்க அவர் வந்துள்ளார். ஆனால் நீ அவரை விரட்டி அடித்து உள்ளாய் என நவநிர்மாண் சேனாவை சேர்ந்த அவினாஷ் ஜாதவ் என்பவர் கட்டுமான அதிபரிடம் கூறுகிறார். அதற்கு கட்டுமான அதிபர், சிறிய அளவிலான தொகையை புற்றுநோயாளிக்கு கொடுத்ததாகவும், மேலும் பணம் தேவைப்பட்டால் என்னிடம் கூறுமாறு அவரிடம் சொன்னதாக கூறுகிறார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அவினாஷ் ஜாதவ், ரூ.5 ஆயிரம், 10 ஆயிரத்தில் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா என கேட்டு கட்டுமான அதிபரை கன்னத்தில் அறைந்து விட்டு, பின்னர் சரமாரியாக தாக்குகிறார். அவருடன் இருப்பவர்களும் கட்டுமான அதிபரை அடிக்கின்றனர். பின்னர் 2 நாட்களுக்குள் புற்று நோயாளிக்கு பணத்தை கொடுக்க வேண்டும் என நவநிர்மாண் சேனாவினர் கட்டுமான அதிபரிடம் கூறுகின்றனர்.

புற்றுநோயாளியை ஏமாற்றிய கட்டுமான அதிபரை நவநிர்மாண் சேனாவினர் தாக்கியதற்கு ஆதரவும், வரவேற்பும் தெரிவித்து பொது மக்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story