கலசபாக்கத்தில் 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் கருப்பு கொடியுடன் ஊர்வலம்


கலசபாக்கத்தில் 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் கருப்பு கொடியுடன் ஊர்வலம்
x
தினத்தந்தி 15 Feb 2019 3:30 AM IST (Updated: 15 Feb 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கத்தில் 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் கருப்பு கொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.

கலசபாக்கம், 

சென்னையில் இருந்து சேலத்திற்கு 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த அளவிடும் பணிகள் நடைபெற்றது. இந்த பசுமைச் சாலை திட்டத்திற்கு தொடர்ந்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கலசபாக்கத்தில் 8 வழி பசுமைச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் கலசபாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பஜார் வீதியில் உள்ள தாலுகா அலுவலகம் வரை கையில் கருப்பு கொடியுடன் ஊர்வலமாக வந்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக்கோரியும், நில மதிப்பீட்டை உயர்த்தி வழங்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். தாலுகா அலுவலகம் முன்பு இருந்த மற்றொரு குழுவினரும் அவர்களுடன் இணைந்து தாலுகா அலுவலகத்தில் உள்ள நில எடுப்பு தாசில்தார் ரவியை சந்தித்து மனு அளிக்க சென்றனர்.

அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஒவ்வொரு நபர்களாக தான் செல்ல வேண்டும் என்றனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை தடுக்க வருவாய் ஆய்வாளர் சுசீலாவிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு சில விவசாயிகள் மட்டும் கோரிக்கை மனுவை தாசில்தாரிடம் அளித்தனர். மற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story