புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமியின் தர்ணா 3 வது நாளாக நீடிப்பு


புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமியின் தர்ணா 3 வது நாளாக நீடிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2019 4:43 AM GMT (Updated: 15 Feb 2019 4:43 AM GMT)

புதுச்சேரியில் ஆளுநரை கண்டித்து முதல்வர் நாராயணசாமி 3-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

புதுச்சேரி,

புதுவையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே கவர்னராக கிரண்பெடி நியமிக்கப்பட்டார். அப்போது இருந்தே அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே பனிப்போர் இருந்து வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்காமல் கோப்புகளை திருப்பி அனுப்புவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார்.

ஆனால் கவர்னர் கிரண்பெடி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் தான் அரசின் இலவச பொருட்களை வழங்க முடியும் என்று கூறி முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதனால் கவர்னர், முதல்-அமைச்சர் இடையேயான மோதல் நீடித்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் அனுப்பிய கடிதத்திற்கு கவர்னர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே கவர்னர் கிரண்பெடியை கண்டித்து நேற்று முன்தினம் மதியம் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் சென்று கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தினை தொடங்கினார்.

3-வது நாளாக இன்றும் தர்ணா போராட்டம் நீடிக்கிறது. போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், இதனை கண்டுகொள்ளாமல் புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட கவர்னர் கிரண்பேடி, டெல்லி சென்றார்.  அதேசமயம், ஆளுநர் மாளிகை வளாகம் போராட்டக்களமாக மாறியிருப்பதால், அதிவிரைவு அதிரடிப்படை, துணை ராணுவம் மற்றும் தொழில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். புதுச்சேரியில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் இடைக்கால நிர்வாகியை நியமிக்கவேண்டும் என சபாநாயகர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story