தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்தின் கீழ் மலைப்பகுதி விவசாயத்துக்கு 15 சதவீதம் மானியம்


தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்தின் கீழ் மலைப்பகுதி விவசாயத்துக்கு 15 சதவீதம் மானியம்
x
தினத்தந்தி 16 Feb 2019 4:15 AM IST (Updated: 15 Feb 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ் மலைப்பகுதி விவசாயத்துக்கு 15 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

ஊட்டி,

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்து கலெக்டர் பேசியதாவது:-

நீலகிரியில் ஒரு ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்து உள்ள விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசனக்கருவிகள் வழங்க கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தெளிப்பு நீர் பாசனக்கருவிகள் வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் வசம் உள்ள பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்ய தோட்டக்கலை பண்ணைகளில் இடம் ஒதுக்கீடு செய்து தரப்படும். தோட்டக்கலைத்துறை சார்பில் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்குகள் அனுபவம் உள்ள விவசாயிகள், தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு நடத்தப்பட்டு உள்ளது.

மேலும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக இயற்கை வேளாண் விவசாயிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு விவசாயி ஒரு சென்ட் நிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் ஏதும் இல்லை. இயற்கை விவசாய மாவட்டமாக நீலகிரியை மாற்ற அறிவிப்பு வழங்கப்பட்ட நிலையில், இயற்கை வேளாண்மை செய்து சான்றிதழ் பெறும் விவசாயிகள், அந்த சான்றிதழை இயற்கை விவசாய அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ் மலைப்பகுதி விவசாயத்திற்கு என 15 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கேத்தி அருகே கெரடா பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உரிய ரசீது வழங்காததால், பாலுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை என்ற புகாருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கப்படும் விவசாயிகளுக்கு, கோடை காலங்களில் அதனை பராமரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கேரட் கழுவும் எந்திரம் நவீன தொழில்நுட்பமாக இருப்பதால், கேரட்டுகள் கழுவப்பட்டு உண்மை நிறத்தை வெளிப்படுத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த எந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குன்னூர் பிருந்தாவன் பள்ளி அருகே உள்ள ஓடையை தூர்வார பொக்லைன் எந்திரம் பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story