ஆம்பூர் அருகே சிறுத்தை மீண்டும் ஊருக்குள் புகுந்தது 4 ஆடுகளை அடித்து கொன்றதால் பொதுமக்கள் பீதி
ஆம்பூர் அருகே சிறுத்தை மீண்டும் ஊருக்குள் புகுந்து 4 ஆடுகளை அடித்து கொன்றது. அதில் ஒரு ஆட்டை காட்டுக்குள் இழுத்து சென்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் காப்புக்காடு உள்ளது. இக்காப்புக்காட்டையொட்டி சுட்டகுண்டா, அபிகிரிபட்டறை, கதவாளம், பொன்னபல்லி போன்ற கிராமங்கள் உள்ளது. இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பை தொழிலாக கொண்டுள்ளனர்.
அரங்கல்துருகம் காப்புக்காடு பகுதியில் சிறுத்தை, யானை, காட்டெருமை போன்ற விலங்குகள் உள்ளன. சிறுத்தைகள், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளை அடித்து, கொன்று வருவது அவ்வப்போது நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை சிறுத்தை கடித்துக்கொன்றது.
மேலும் வாணியம்பாடியை அடுத்த நாகலேரி பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் சிறுத்தை ஒன்று கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்தது. அப்போது அங்கு சென்ற ஒரு பெண் உள்பட 3 பேரை கடித்ததில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தையை பார்க்க பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது கூட்டத்தினர் மீது சிறுத்தை பாய்ந்து கடித்ததில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வனத்துறையினர் சிறுத்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதிகளில் அதனை பிடிப்பதற்காக கூண்டுகளை வைத்தனர். ஆனால் சிறுத்தை அதில் சிக்கவில்லை.
தற்போது அபிகிரிபட்டறை கிராமத்தை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 2 நாட்களாக சிறுத்தை நாடமாட்டம் உள்ளது. இதனால் அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் வெங்கடேசன் என்பவர் தனது வீட்டின் அருகே ஆட்டுப்பட்டி அமைத்துள்ளார். அதில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை அவர் வளர்த்து வந்தார். நேற்று அதிகாலையில் அந்த பட்டிக்கு வந்த சிறுத்தை, 3 ஆடுகளை அடித்து கொன்று, கடித்து குதறியுள்ளது. இதில் 3 ஆடுகள் அங்கேயே ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க இறந்தது. மேலும் ஒரு ஆட்டை அடித்து கொன்று காட்டுக்குள் இழுத்து சென்றுள்ளது.
ஆட்டுப்பட்டிக்கு வந்த வெங்கடேசன் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊருக்கு அருகிலேயே சிறுத்தை வந்து 4 ஆடுகளை அடித்து கொன்று, அதில் ஒரு ஆட்டை காட்டுக்குள் இழுத்து சென்ற சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story