வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல் டிரைவர் கைது
பரங்கிமலையில், சரக்கு வேனில் கடத்தி வந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக டிரைவரை கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் வாகனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் கொண்ட தனிப்படையினர் பரங்கிமலை-பூந்தமல்லி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சரக்கு வேன் ஒன்று போலீசாரை கண்டதும் நிற்காமல் அதிவேகமாக சென்றது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த சரக்கு வாகனத்தை நீண்ட தூரம் விரட்டிச்சென்று பரங்கிமலை நசரத்புரம் அருகே மடக்கிப்பிடித்தனர். பின்னர் சரக்கு வேனை சோதனை செய்தபோது அதில் 400 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வேன் டிரைவரான பரங்கிமலையை சேர்ந்த சின்னதுரை(வயது 31) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
அதில் அவர், பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து பரங்கிமலை, நந்தம்பாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
Related Tags :
Next Story