நெல்லையில் குடோனில் பதுக்கிய ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் மினிலாரி டிரைவர் உள்பட 3 பேர் கைது
நெல்லையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பேட்டை,
நெல்லையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மினிலாரி டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் அதிரடி சோதனை
நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஒரு குடோனில் குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனைக்காக பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வருவதாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், போலீசார் அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு அட்டை பெட்டிகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், இந்த குடோன் அதே பகுதியை சேர்ந்த ஹனிபா (வயது 50), அலாவுதீன் (38) ஆகியோருக்கு சொந்தமானது என்பதும், இவர்கள் பெங்களூரில் இருந்து, மினி லாரியில் மாட்டு தீவனங்களுடன் இந்த பொருட்களை கடத்தி வந்து, குடோனில் பதுக்கி வைத்து பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வந்ததும் தெரியவந்தது.
3 பேர் கைது
இந்த புகையிலை பொருட்களை கடத்தி வந்த மினிலாரி டிரைவர் சம்பத் (32), கிளனர் சின்னதம்பி, அலாவுதீன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்தனர். பின்னர் மினி லாரியையும் பறிமுதல் செய்து சுத்தமல்லி போலீசில் ஒப்படைத்தனர். மேலும் அலாவுதீனிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஹனிபாவை வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story