களியக்காவிளை சந்தையில் கடைகளுக்கான இடஒதுக்கீட்டில் முறைகேடு பேரூராட்சி செயல் அலுவலரை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்
களியக்காவிளை சந்தையில் கடைகளுக்கான இடம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி பேரூராட்சி செயல் அலுவலரை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
களியக்காவிளை,
குமரி-கேரள எல்லையில் களியக்காவிளை பஸ் நிலையம் உள்ளது. பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய அரசு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்தது. அதைத்தொடர்ந்து பஸ் நிலையத்துக்கும், காய்கறி சந்தைக்கும் இடைப்பட்ட சுற்றுச்சுவரை இடித்து, விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது.
இதைத்தொடர்ந்து களியக்காவிளை பேரூராட்சிக்கு சொந்தமான காய்கறி மற்றும் மீன்சந்தை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி செயல் அலுவலர் சத்தியதாஸ் மற்றும் சந்தை குத்தகைதாரர் ஆகியோர் ஒருதலைபட்சமாக பெரிய வியாபாரிகளுக்கு மட்டும் மாற்று இடத்தை வழங்கியதாகவும் தேங்காய், காய்கறி போன்ற சிறு வியாபாரிகளுக்கு இடம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் சந்தையில் கடைகளுக்கான இடம் ஒதுக்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் நேற்று காலை திடீரென பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர். பின்னர், அவர்கள் தங்களுக்கு இடம் ஒதுக்கி தராததால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி செயல் அலுவலர் சத்திய தாசை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சிறு வியாபாரிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) இடம் ஒதுக்கி தருவதாக உறுதி கூறினார்கள். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story