மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது, தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில் கலெக்டர் பேச்சு


மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது, தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 16 Feb 2019 4:30 AM IST (Updated: 16 Feb 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை என்று ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில் கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறினார்.

தேனி,

தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வித்துறை சார்பில் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பின் தொடக்க நிகழ்ச்சி ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசும் போது கூறியதாவது:-

தமிழக அரசு மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகள் கல்வி கற்பதில் ஆர்வம், கவனம், தன்னம்பிக்கை, முயற்சி மற்றும் ஆசை இருந்தால் எளிதில் வெற்றி பெற முடியும். புதிய பாடங்களை படிக்காமல் தற்போது படித்த பாடங்களை திரும்ப படிக்கும் போது அது நம் நினைவுக்கு வரும். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கூர்ந்து கவனித்தால் மனதில் ஆழமாய் பதியும்.

உணவு, உறக்கமும் மிகவும் முக்கியமானது. எந்த ஒரு செயலிலும் நாம் பயத்துடன் ஈடுபடக்கூடாது. கல்வி என்பது புத்தகங்களை மனப்பாடம் செய்வது மட்டும் இல்லை. நம் அன்றாட வாழ்வில் நடக்கும் நல்லது மற்றும் தீய விசயங்களை அறிந்து கொள்வதே கல்வியாகும்.

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை. நமக்கு பிடித்தமான விளையாட்டு, இசை, கலை, அரசியல் போன்றவற்றில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எளிதில் வாழ்வில் வெற்றி பெற முடியும். லட்சியம் தெளிவாக இருந்தால் உயர்ந்த இடத்தை எளிதில் பெற முடியும். மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் அரசு பொதுத்தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, பள்ளி தலைமை ஆசிரியை புனிதா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story