சேலத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 57 ரவுடிகள் கைது
சேலத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 57 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சேலம்,
சேலம் மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்யும் பணியை நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் தொடங்கினர். இதற்காக அவர்கள் இரவில் விடிய, விடிய மாநகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.
கிச்சிப்பாளையத்தில் சிலம்பரசன், விக்னேஸ்வரன், குட்டி என்கிற மோசஸ், பிரபு, ஜீசஸ் உள்பட 14 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சேலம் டவுன், செவ்வாய்பேட்டை, கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை என மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் பல ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 57 ரவுடிகளை தனிப்படை போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். கைதானவர்களில் பலர் மீது கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வன்முறை, திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story